வெறும் 93க்கு அவுட்.. 200 ரன்ஸ்.. ஓடவிட்ட ஆப்கானிஸ்தான் மிகப்பெரிய வெற்றி.. வங்கதேசம் மோசமான சாதனை

Afghanistan 2
- Advertisement -

வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சார்ஜாவில் நடைபெற்றது. அத்தொடரில் சிறப்பாக விளையாடிய வங்கதேசம் 3 – 0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தானை ஒய்ட்வாஷ் செய்து கோப்பையை வென்றது. அடுத்ததாக அவ்விரு அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அபுதாபியில் நடைபெற்றது.

அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற ஆப்கானிஸ்தான் ஆரம்பத்திலேயே தொடரைக் கைப்பற்றியது. அந்த சூழ்நிலையில் சம்பிரதாய கடைசி போட்டி அக்டோபர் 14ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

ஓடவிட்ட ஆப்கானிஸ்தான்:

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 293/5 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக கடந்தப் போட்டியை போலவே இப்போட்டியிலும் 95 ரன்கள் குவித்த இப்ராஹிம் ஜாட்ரான் ரன் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். அதனால் விரக்தியடைந்த அவர் பேட்டால் தரையில் அடித்து தன்னுடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். அவருடன் ரஹமனுல்லா குர்பாஸ் 42, முகமது நபி 62* ரன்கள் அடித்து ஆப்கானிஸ்தானுக்கு கை கொடுத்தார்கள்.

வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக சாய்ஃப் ஹசன் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய வங்கதேசத்துக்கு சாய்ஃப் ஹசன் நங்கூரமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் முகமத் நைம் 7, நஜ்முல் சாண்டோ 3, டௌஹித் ஹ்ரிடாய் 7, கேப்டன் மெஹதி ஹசன் 6 என மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர். மறுபுறம் போராடிய ஹசனும் 43 ரன்னில் ரசித் கான் சுழலில் கிளீன் போல்ட்டானார்.

- Advertisement -

சாதனை வெற்றி:

இறுதியில் அடுத்து வந்த வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் பெவிலியின் திரும்பியதால் வங்கதேசத்தை 27.1 ஓவரில் 93 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய ஆப்கானிஸ்தான் 200 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக வங்கதேசத்தை 100 ரன்களுக்குள் ஆல் அவுட்டாக்கி ஆப்கானிஸ்தான் அசத்தியுள்ளது. அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக தங்களது பெரிய வெற்றியைப் பெற்று ஆப்கானிஸ்தான் சாதனை படைத்தது.

இதையும் படிங்க: ஆஸி ஒருநாள் தொடருடன் விராட், ரோஹித் சர்மா ஓய்வு பெறுகிறார்களா? ராஜிவ் சுக்லா பேட்டி

இதனால் இத்தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்ற ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் சந்தித்த தோல்விக்கு வங்கதேசத்தை பழி தீர்த்து பதிலடி கொடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக பிலால் சமி 5, ரஷீத் கான் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். மறுபுறம் படுதோல்வியை சந்தித்த வங்கதேசம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது. இதற்கு முன் இதே தொடரில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே முந்தைய குறைந்தபட்ச ஸ்கோர்.

Advertisement