ஜிம்பாப்வே, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் தற்போது பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த மூன்றாவது லீக் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி துவக்கத்தில் 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் அந்த அணியின் அனுபவ வீரரான நபி ஆட்டத்தை மாற்றினார். 54 பந்துகளில் 84 ரன்களை குவித்தவர் அந்த அணியை 164 ரன்கள் வரை கொண்டு சென்றார்.
அதன்பிறகு 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தானில் 139 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆட்டநாயகனாக முகமது நபி தெரிவுசெய்யப்பட்டார். இந்த போட்டியில் வெற்றி மூலம் ஆப்கானிஸ்தான் அணி ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியது.
அதாவது உலகின் பலம்வாய்ந்த அணிகளான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கூட செய்யாத ஒரு சாதனையை டி20 போட்டியில் செய்துள்ளது. அது யாதெனில் தொடர்ச்சியாக சர்வதேச டி20 போட்டிகளில் 12 வெற்றிகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பாக தொடர்ந்து 11 சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்ற சாதனையை அந்த அணிதான் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.