- Advertisement -
உலக கிரிக்கெட்

8 ரன்ஸ்.. போராடிய லிட்டன் தாஸ்.. வங்கதேசத்துடன் ஆஸியை நாக் அவுட்டாக்கிய ஆப்கானிஸ்தான்.. வரலாற்று சாதனை

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 25ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6:00 மணிக்கு செயின்ட் வின்சென்ட் 52வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தானுக்கு 59 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இப்ராஹிம் ஜாட்ரான் தடுமாற்றமாக விளையாடி 18 (29) ரன்னில் அவுட்டானார்.

அவருடன் சேர்ந்து விளையாடிய ரஹமனுல்லா குர்பாஸ் அதிகபட்சமாக 43 (55) ரன்கள் எடுத்தார். ஆனால் ஓமர்சாய் 10, குல்பதின் 4, நபி 1 என அடுத்து வந்த வீரர்கள் பேட்டிங்க்கு சவாலாக இருந்த பிட்ச்சில் வங்கதேசத்தின் நேர்த்தியான பந்து வீச்சில் பெரிய ரன்கள் அடிக்க தவறினர். இறுதியில் கேப்டன் ரசித் கான் 19* (10) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் ஆப்கானிஸ்தான் வெறும் 115/5 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் புதிய வரலாறு:
வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அப்போது மழை வந்ததால் வங்கதேசம் வெற்றி பெற 19 ஓவரில் 114 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு உருவாக்கப்பட்டது. அந்த இலக்கை 13 ஓவர்களுக்கு மேல் சேசிங் செய்தால் ஆஸ்திரேலியா செமி ஃபைனல் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. இருப்பினும் ஆரம்பம் முதலே அசத்திய ஆப்கானிஸ்தான் தன்சிம் ஹசன் 0, கேப்டன் சாண்டோ 0, ஷாகிப் 0, சர்கார் 10, ஹ்ரிடாய் 14, மகமதுல்லா 6 என முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி போராடியது.

ஆனாலும் மறுபுறம் வங்கதேச துவக்க வீரர் லிட்டன் தாஸ் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி ஆப்கானிஸ்தானுக்கு சவாலை கொடுத்ததால் ஆஸ்திரேலியா உள்ளே வந்து விடுமோ என்று ரசிகர்கள் நினைத்தனர். இருப்பினும் எதிர்புறம் ரிஷாத் ஹொசைன் 0, தன்சிம் சாகிப் 3, தஸ்கின் 2, ரஹ்மான் 0 என அடுத்து வந்த வீரர்களை ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்த ஆப்கானிஸ்தான் 17.5 ஓவரிலேயே வங்கதேசத்தை 105 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில்லர் வெற்றி பெற்றது.

- Advertisement -

அதனால் லிட்டன் தாஸ் 54* (49) ரன்கள் எடுத்தும் வங்கதேசம் பரிதாபமாக தோற்று வெளியேறியது. அதன் காரணமாக வங்கதேசத்துடன் சேர்த்து ஆஸ்திரேலியாவையும் வீட்டுக்கு அனுப்பி வைத்த ஆப்கானிஸ்தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் செமி ஃபைனலில் விளையாடுவதற்கு தகுதி பெற்றது. சொல்லப்போனால் ஒரு ஐசிசி தொடரில் முதல் முறையாக செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று ஆப்கானிஸ்தான் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: ஜிம்பாப்வே டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இந்த 4 வீரர்களை கவனிச்சீங்களா? – விவரம் இதோ

அதனால் ஆப்கானிஸ்தான் வீரர்கள் களத்திலேயே ஆனந்த கண்ணீர் விட்டு வெற்றியை கொண்டாடினர். அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ரசித் கான் 4, நவீன்-உல்-ஹக் 4 விக்கெட்டுகளை எடுத்து இந்த வரலாற்று வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

- Advertisement -