
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஜூன் 23ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6:00 மணிக்கு செயின்ட் வின்சென்ட் நகரில் 48வது போட்டி நடைபெற்றது. அந்த சூப்பர் 8 போட்டியில் வலுவான ஆஸ்திரேலியா அணியை ஆப்கானிஸ்தான் எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்கள் ரஹமனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜாட்ரான் ஆகியோர் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடினர். அந்த வகையில் 16 ஓவர்கள் வரை நிலைத்து நின்ற இந்த ஜோடி 118 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தது. அதில் குர்பாஸ் 60 (49) ரன்களும் இப்ராஹிம் 51 (48) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள்.
சரித்திர வெற்றி:
அடுத்ததாக வந்த ஓமர்சாய் 2 ரன்னில் அவுட்டானார். அதற்கடுத்ததாக வந்த கரீம் ஜனத் 13, கேப்டன் ரசித் கான் 2, குல்பதின் நைப் 0 ரன்களில் பட் கமின்ஸ் வேகத்தில் அவுட்டானார்கள். அதனால் டி20 உலகக் கோப்பையில் இரண்டாவது முறையாக ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்து பட் கமின்ஸ் சாதனை படைத்தார். இறுதியில் முகமது நபி 10* (4) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் ஆப்கானிஸ்தான் 148/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக பட் கமின்ஸ் 3, ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 149 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட்டை முதல் ஓவரிலேயே நவீன் டக் அவுட்டாக்கினார். போதாக்குறைக்கு டேவிட் வார்னர் 3, கேப்டன் மார்ஷ் 12 ரன்களில் அவுட்டானதால் 32/3 என ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியா தடுமாறியது. அப்போது கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார்.
ஆனால் எதிர்ப்புறம் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 11, டிம் டேவிட் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர் அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மறுபுறம் போராடிய மேக்ஸ்வெல் 59 (41) ரன்களில் முக்கிய நேரத்தில் அவுட்டானார். அதை பயன்படுத்தி ஆப்கானிஸ்தான் அடுத்ததாக வந்த மேத்தியூ வேட் 6, பட் கமின்ஸ் 3, அஸ்டன் அகர் 2, ஆடம் ஜாம்பா 1 ரன்களில் அவுட்டாக்கி மிரட்டியது.
அதனால் 19.2 ஓவரிலேயே ஆஸ்திரேலியாவை 127 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய ஆப்கானிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் 6 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு வெற்றியை பெற்று ஆப்கானிஸ்தான் புதிய சரித்திரம் படைத்தது. அத்துடன் ஐசிசி தொடர்களில் கடைசி 14 போட்டிகளிலும் டி20 உலகக் கோப்பையில் கடைசி 8 போட்டிகளிலும் தோல்வியை சந்திக்காமல் மிரட்டி வந்த ஆஸ்திரேலியாவின் வெற்றி நடையையும் ஆப்கானிஸ்தான் உடைந்துள்ளது.
இதையும் படிங்க: இவரையா கலாய்ச்சோம்.. ரெய்னா, தோனியின் சாதனையை உடைத்த பாண்டியா.. இந்தியாவுக்காக வரலாற்று சாதனை
அதை விட 2023 உலக கோப்பையில் கையில் வைத்திருந்த வெற்றியை இதே மேக்ஸ்வெல் பறித்ததை மறக்க முடியாது. ஆனால் இப்போட்டியில் அதே மேக்ஸ்வெல் ஆட்டத்தை தாண்டி ஆஸ்திரேலியாவை தோற்கடித்த ஆப்கானிஸ்தான் பழிக்கு பழிதீர்த்து தங்களது கடைசி போட்டியில் வென்றால் செமி ஃபைனல் செல்லலாம் என்று நல்ல நிலைக்கு வந்துள்ளது. அந்த அணியின் இந்த சரித்திர வெற்றிக்கு நவீன்-உல்-ஹக் 3, குல்பதின் நைப் 4 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினர்.