தோல்வியை ஏற்றுக்கொள்ளமுடியாமல் கலங்கி அழுத ஆப்கானிஸ்தான் வீரர்கள் – மனதை வென்ற தருணம்

AFG
- Advertisement -

கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கிய 15-வது ஆசிய கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் தற்போது “சூப்பர் 4” சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த “சூப்பர் 4” சுற்றின் நேற்றைய முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரின் போது த்ரில் வெற்றியை பெற்ற பாகிஸ்தான அணி ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதே வேளையில் தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணியானது இந்திய அணியுடன் சேர்ந்து இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

அதன்படி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த முக்கியமான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் குவித்தது. பின்னர் 130 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது எளிதில் இந்த வெற்றி இலக்கினை துரத்தி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஆப்கானிஸ்தான அணியின் சிறப்பான பீல்டிங் மற்றும் பவுலிங் காரணமாக போட்டி கடைசி ஓவர் வரை சென்றது.

- Advertisement -

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை போராடியே பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில் ஒரே விக்கெட் மட்டும்தான் பாகிஸ்தான் கையில் இருந்தது. ஆனாலும் இறுதி ஓவரில் அந்த அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் நசிம் ஷா இரண்டு சிக்ஸர்களை அடித்து அந்த அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

இந்திய அணியையே எளிதாக துரத்திய பாகிஸ்தான் அணியானது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மிகவும் திணறியே வென்றது. அந்த அளவிற்கு ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் சிறப்பான பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கை இந்த போட்டியில் வெளிப்படுத்தினர். ஒரு கட்டத்தில் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்றபோது ஆப்கானிஸ்தான் அணிதான் வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இறுதி ஓவரின் முதல் இரண்டு பந்துகளும் சிக்ஸருக்கு செல்லவே ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இறுதியில் ஒரே விக்கெட் மட்டுமே இருந்த வேளையில் நிச்சயம் தங்கள் அணி தான் வெற்றி பெறும் என்று நம்பியிருந்த அந்த வீரர்களுக்கு இந்த தோல்வி மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. இதன் காரணமாக மைதானத்திலேயே ஆப்கானிஸ்தான் வீரர்கள் கண்கலங்கி அழுத சம்பவம் ரசிகர்களின் மனதை வருத்தம் அடையச் செய்தது. ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ரஹ்மானுல்ல குர்பாஸ், வேகப்பந்து வீச்சாளர் பஸல் பரூக்கி மற்றும் பரீத் அஹமத் ஆகியோர் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் மைதானத்திலேயே கண்கலங்கினர்.

இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் வீரரை பேட்டால் அடிக்க பாய்ந்த பாக் வீரர். பரபரப்பான ஷார்ஜா மைதானம் – நடந்தது என்ன?

உடனே அவர்களை அந்த அணியின் சக வீரர்கள் ஆசுவாசப்படுத்தினாலும் அவர்களால் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னதான் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்திருந்தாலும் நிச்சயம் அந்த அணியே வெற்றியாளர்கள் என ஆப்கானிஸ்தான் அணியின் இந்தப் போராட்டத்தை பாராட்டி ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement