- Advertisement -
உலக கிரிக்கெட்

38 ரன்ஸ்.. ஒரே பார்ட்னர்ஷிப்பால் வெ.இஸை முடித்த ஆப்கானிஸ்தான்.. 2026 டி20 உ.கோ ஃபார்முக்கு வந்து மிரட்டல்

ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் ஜனவரி 19ஆம் தேதி துவங்கியது. துபாயில் நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தானுக்கு ரகமனுல்லா குர்பாஸ் 0, செதிக்குள்ளா அட்டல் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

அதனால் 19/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய ஆப்கானிஸ்தானுக்கு மற்றொரு துவக்க வீரர் இப்ராஹிம் ஜாட்ரான் அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த டார்விஷ் ரசூலி நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். நேரம் செல்ல செல்ல வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை வெளுத்து வாங்கிய அந்த ஜோடி 162 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து ஆப்கானிஸ்தானை தூக்கி நிறுத்தியது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அசத்தல்:

அதில் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 84 (59) ரன்கள் விளாசிய ரசூலி கடைசி பந்தில் அவுட்டானார். மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாத இப்ராஹிம் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 87* (56) ரன்கள் விளாசினார். அதனால் 20 ஓவரில் ஆப்கானிஸ்தான் 181/3 ரன்கள் குவித்து அசத்தியது. வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக மேத்தியூ போர்ட்ஜ், ஜெய்டேன் சீல்ஸ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

அடுத்ததாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் கிங் 4, எவின் லெவிஸ் 3, அமீர் ஜங்கோ 3, சிம்ரோன் ஹெட்மயர் 3 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே மெகா பின்னடைவை கொடுத்தனர். போதாகுறைக்கு அதிரடி காட்ட முயற்சித்த ஜான்சன் சார்லஸ் 27 (16) ரன்களில் அவுட்டானதால் 50/5 என வெஸ்ட் இண்டீஸ் சரிவை சந்தித்தது. அப்போது மிடில் ஆர்டரில் பொறுப்புடன் விளையாடிய குவிண்டின் சாம்ப்சன் 30 (24), மேத்தியூ போர்ட்ஜ் 25 (21) ரன்கள் குவித்து போராடி அவுட்டானார்கள்.

- Advertisement -

மீண்டும் ஃபார்மில்:

இறுதியில் குடகேஷ் மோட்டி 28 (15) ரன்கள் எடுத்தும் மற்ற வீரர்கள் கைகொடுக்கத் தவறியதால் 20 ஓவரில் 143/9 ரன்களை மட்டுமே எடுத்த வெஸ்ட் இண்டீஸ் பரிதாபமாக தோற்றது. அதனால் 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தானுக்கு அதிகபட்சமாக முஜீப் உர் ரகுமான் 2, கேப்டன் ரசித் கான் 2, நூர் அஹ்மத் 2, ரஹ்மான் சரிபி 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதன் காரணமாக விரைவில் துவங்கும் 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் இத்தொடரில் 1 – 0* (3) என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: 4 ஆவது இந்திய வீரராக டி20 போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – சூரியகுமார் யாதவ்

2024 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற வலுவான அணிகளை தோற்கடித்த ஆப்கானிஸ்தான் செமி ஃபைனல் வரை சென்று மிரட்டியது. இருப்பினும் 2025 ஆசியக் கோப்பை போன்ற சமீபத்திய தொடர்களில் தடுமாறிய ஆப்கானிஸ்தான் கடந்த மாதம் ஜிம்பாப்வேவை 3 – 0 (3) என்ற கணக்கில் தோற்கடித்தது. அந்த நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தத் துவங்கியுள்ள ஆப்கானிஸ்தான் 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன் தக்க சமயத்தில் ஃபார்முக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -