ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. அத்தொடருக்கு தயாராகும் வகையில் ஐக்கிய அரபு நாடுகள், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடுகின்றன. அந்தத் தொடரின் கடைசி லீக் போட்டி செப்டம்பர் 5ஆம் தேதி சார்ஜாவில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெற்றது.
அப்போட்டியில் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் சிறப்பாக பேட்டிங் செய்து 170/5 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ரஹமதுல்லா குர்பாஸ் 40 (38), கேப்டன் இப்ராஹிம் ஜாட்ரான் 48 (35) ரன்கள் குவித்தனர்.
ஆப்கானிஸ்தான் அசத்தல்:
அதே போல மிடில் ஆர்டரில் கரீம் ஜானத் 28 (14), குல்பதின் 20* (14), ஓமர்சாய் 14* (9) ரன்கள் எடுத்து அசத்தினார்கள். அமீரக அணிக்கு அதிகபட்சமாக ஹைதர் அலி 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த அமீரகம் அணிக்கு கேப்டன் முகமது வாசிம் அதிரடியாக விளையாடி 44 (29) ரன்கள் விளாசி அவுட்டானார். அவருடன் நிதானமாக விளையாடிய அலிசன் சராஃபு 27 (23) ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார்.
மிடில் ஆர்டரில் முகமது சோகைப் 23 (19), ராகுல் சோப்ரா 7 (9) ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். இருப்பினும் அடுத்து வந்த ஆசிப் கான் – ஹர்ஷித் கௌசிக் அதிரடி காட்டியதால் வெற்றியை நெருங்கிய அமீரகம் அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. பரீட் அஹ்மத் வீசிய அந்த ஓவரின் முதல் 2 பந்துகளில் ஆசிப் கான் பவுண்டரி சிக்சரை பறக்க விட்டு அசத்தினார்.
ஃபைனல் எப்போது:
3வது பந்தில் டபுள் எடுத்த அவர் 4, 5வது பந்துகளில் ரன்கள் எடுக்கவில்லை. அதனால் கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட போது ஆசிப் கான் 40 (28) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை சந்தித்தார். அதனால் 20 ஓவரில் அமீரகத்தை 166/5 ரன்களுக்கு கட்டுப்படுத்திய ஆப்கானிஸ்தான் 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் பெற்றது. மறுபுறம் ஹர்ஷித் கௌசிக் அவுட்டாகாமல் 15* (12) ரன்கள் எடுத்து போராடியும் அமீரகம் தோல்வியைச் சந்தித்தது.
இதையும் படிங்க: அவரை மாதிரி ஒரு பிளேயரை பிளேயிங் லெவன்ல இருந்து எப்படி தூக்க முடியும் – சுனில் கவாஸ்கர் கருத்து
இதனால் 4 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்ற ஆப்கானிஸ்தான் புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்தது. சொந்த மண்ணில் 4 போட்டிகளில் 4 தோல்வியை சந்தித்த அமீரகம் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது. 4 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்ற பாகிஸ்தான் ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்தில் இருக்கிறது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மோதும் இத்தொடரின் இறுதிப்போட்டி செப்டம்பர் 7ஆம் தேதி சார்ஜாவில் நடைபெற உள்ளது.



