- Advertisement -
ஆசிய கோப்பை

ஆசியக் கோப்பை: 94 ரன்ஸ்.. ஹாங்காங்கை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்.. 2016ஐ மிஞ்சி பெரிய சாதனை வெற்றி

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கியது. இம்முறை 2026 டி20 உலகக் கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் நோக்கத்தில் அத்தொடர் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறுகிறது. அந்த நிலையில் துவங்கிய ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின.

அபுதாபியில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் சிறப்பாக விளையாடி 188/6 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஓப்பனிங் பேட்ஸ்மேன் செதிகுல்லா அட்டல் 73* (52) ரன்கள் எடுத்து அசத்தினார்.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அசத்தல்:

அவருடன் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடி காட்டிய ஓமர்சாய் 53 (21), மிடில் ஆர்டரில் அசத்திய முகமது நபி 33 (26) ரன்கள் எடுத்தார்கள். ஹாங்காங் அணிக்கு அதிகபட்சமாக ஆயுஷ் சுக்லா, கின்சிட் ஷா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடி ஹாங்காங் அணி எதிர்பார்த்ததைப் போலவே பேட்டிங்கில் மிகவும் தடுமாற்றமாக விளையாடியது.

முன்னேற்றமடைந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறிய அந்த அணி 20 ஓவரில் 94/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பாபர் ஹயட் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு அதிகபட்சமாக பரூக்கி, குல்பதின் நைப் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அதனால் 94 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆப்கானிஸ்தான் இத்தொடரை வெற்றிகரமாக துவக்கியது.

- Advertisement -

சாதனை வெற்றி:

மேலும் குரூப் பி பிரிவின் புள்ளிப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் 2 புள்ளிகளைப் பெற்று அசத்தியது. அத்துடன் ஆசியக் கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தான் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து சாதனைப் படைத்தது. இதற்கு முன் 2016 ஆசியக் கோப்பையில் மிர்பூர் நகரில் இதே ஹாங்காங் அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததே ஆப்கானிஸ்தானின் முந்தைய பெரிய வெற்றியாகும்.

இதையும் படிங்க: இந்தியா ஏ அணிக்காக விராட், ரோஹித் விளையாடும் புதிய ஒருநாள் தொடர்.. தேதிகளை வெளியிட்ட பிசிசிஐ

மறுபுறம் ஹாங்காங் ஆசியக் கோப்பையில் தங்களுடைய மிகப்பெரிய தோல்வியைப் பதிவு செய்து ஏமாற்றத்தை சந்தித்தது. இதை அடுத்து இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் அணிகள் மோதுகின்றன. அந்தப் போட்டி துபாயில் இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -