
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. 2021இல் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற அவரது தலைமையில் இந்தியா ஓரளவு நல்ல வெற்றிகளைப் பெற்றது. இருப்பினும் கடந்த நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் மோசமாக விளையாடிய இந்தியா அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்தது.
அந்தத் தோல்விகளுக்கு முக்கிய காரணமான ரோஹித் சர்மா விமர்சனங்களை சந்தித்தார். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் ஒரு அரை சதம் கூட அடிக்காத அவர் கடைசி போட்டியில் தன்னைத்தானே அணியிலிருந்து நீக்கிக்கொண்ட முதல் இந்திய கேப்டனாக மோசமான சாதனை படைத்தார். அதனால் அத்துடன் அவருடைய டெஸ்ட் கேரியர் முடிந்ததாக பார்க்கப்பட்டது.
ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் ஓய்வு பெறாத தாம் 2025 இங்கிலாந்து தொடரில் விளையாட உள்ளதாக சமீபத்தில் ரோஹித் தெரிவித்திருந்தார். இருப்பினும் மோசமான ஃபார்ம் காரணமாக இங்கிலாந்து தொடரில் ரோஹித் சர்மாவை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்தது. எனவே கழற்றி விடுவதற்கு முன்பாகவே கேப்டனாக ரோகித் சர்மா மரியாதையுடன் ஓய்வு பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ரோஹித் சர்மா ஓய்வு பெறப்போகிறார் என்பதை கடந்த ஜனவரி மாதம் சிட்னியில் நடைபெற்ற போட்டியில் பெஞ்சில் அமர்ந்த போதே தமக்கு தெரியும் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த முடிவுக்கு முன் ஏதேனும் உரையாடல் இருந்திருக்க வேண்டும். இங்கிலாந்து தொடரில் உங்களை தேர்ந்தெடுக்க மாட்டோம் என்று ரோஹித்திடம் சொல்லப்பட்டிருக்கலாம்”
“அதுவே என்னுடைய உணர்வாகும். அதைப் பற்றி நமக்கும் தெரியாது. ஆனால் இதுவே நடந்திருக்க வேண்டும். சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவிடம் பேசிய போது அவருடைய ஓய்வு பற்றி நான் உணர்ந்தேன். அந்தப் போட்டியே அவருடைய டெஸ்ட் கேரியர் சாலையின் இறுதியாக இருக்கும் என்று கருதினேன். அதைத் தாண்டி ரோஹித் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடி அனைத்தும் எவ்வாறு செல்கிறது என்பதைப் பார்க்க அனுமதித்தார்”
இதையும் படிங்க: முத்தரப்பு தொடர்: 337 ரன்ஸ்.. தெ.ஆ’வை சாய்த்து ஃபைனல் சென்ற இந்தியா.. ஃபைனலில் மோதப்போவது யார்?
“தன்னுடைய டெஸ்ட் கேரியரில் பங்காற்றியதற்காக ரோஹித் சர்மாவுக்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மாஸ்டரான அவர் டெஸ்ட் போட்டிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அசத்தினார் என்பதில் சந்தேகம் இல்லை. இதுவே நமக்கான சரியான நேரம் என்று அவர் உணர்ந்திருக்கலாம். அது போன்றவர்களை நான் எப்போதும் விரும்புவேன். இந்த நேரத்தில் ரோஹித் சர்மா தமது வழியில் வரும் அனைத்து பாராட்டுக்களையும் மகிழ்ச்சியுடன் ஏற்க வேண்டும். ஏனெனில் அவர் அதற்கு முழுமையாக தகுதியானவர்” எனக் கூறினார்.