இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா 7 மாதங்களுக்குப் பின் ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரில் விளையாடினார்கள். அத்தொடரில் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டிக்கு முன் ரோஹித் சர்மாவை ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் சந்தித்தார். அப்போது டெக்கான் சார்ஜர்ஸ் ஐபிஎல் அணிக்காக ஒன்றாக விளையாடியதை அவர் நினைவு கூர்ந்தார்.
2009 ஐபிஎல் கோப்பையை கில்கிறிஸ்ட் தலைமையில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி வெல்வதற்கு ரோஹித் சர்மா முக்கிய பங்காற்றினார். குறிப்பாக அந்த அணியில் ரோஹித் சர்மா பவுலராக ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்ததை மறக்க முடியாது. அந்த வகையில் தம்முடைய பழைய நண்பரான ரோஹித் சர்மாவுடன் எடுத்த புகைப்படத்தை கில்கிறிஸ்ட் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
ஒரே நாளில் 24000:
இது பற்றி அவர் பதிவிட்டது பின்வருமாறு. “இந்த மனிதர் 2008ஆம் ஆண்டு நாங்கள் முதன் முதலில் ஒருவரை ஒருவர் சந்தித்த தருணங்களை இன்று அடிலெய்டில் உள்ள இந்த அழகான மைதானத்தில் நினைவூட்டினார். முதல் ஐபிஎல் ஏலத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் எங்கள் இருவரையும் வாங்கிய போது தான் அது நடந்தது. அங்கிருந்து ஒரு நட்பு பிறந்தது”
“சர்வதேச கிரிக்கெட்டை விட்டு வெளியேறக் காத்திருக்கும் ஒரு வயதான காளை இந்தியாவின் சிறந்த வீரர்களில் ஒருவராக உயரும் இளம் காளைகளுடன் சேர்ந்துள்ளது. ரோஹித் சர்மா உங்களுடன் இணைந்து விளையாடியது, ஒரு வர்ணையாளர் மற்றும் ரசிகராக உங்களைப் பார்ப்பது, ஒரு சக வீரராக உங்களை அறிந்து கொண்டது சிறப்பாக இருக்கிறது” என்று பதிவிட்டார். அவருடைய அந்தப் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
கில்கிறிஸ்ட் வியப்பு:
ரோஹித் சர்மாவுடன் அவர் இருக்கும் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் 20 லட்சம் லைக்குகளை நெருங்கி வருகிறது. இந்நிலையில் ரோஹித்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்ததால் ஒரே நாளில் தம்மை 24,000 ரசிகர்கள் புதிதாக பின்தொடர்ந்துள்ளதாக கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். இது பற்றி பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ரவி சாஸ்திரியுடன் அவர் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: ஜேக் காலிஸ், இயன் போத்தமை முந்திய கிங் கோலி.. ஆஸி மண்ணில் மிகசிறந்த ஃபீல்டராக உலக சாதனை
“இந்த நம்பர்கள் இந்திய பார்வையாளர்களுக்கு அவ்வளவு பெரிதாக தெரியாது. ஆனால் ஒரு எளிமையான கதை என்னவெனில் மற்றொரு நாளில் ரோஹித் சர்மா எனக்கு இன்ஸ்டாகிராமில் (வீடியோவுக்கு) 7 மில்லியன் பார்வையாளர்கள் மற்றும் புகைப்படத்திற்கு 24000 ஃபாலோயர்களை எனக்கு சம்பாதித்துக் கொடுத்தார்” என்று வியப்புடன் கூறினார்.



