வைராக்கியத்துடன் 9 வருடங்களாக வீட்டுக்கு செல்லாமல் இருக்கும் மும்பை வீரர், நெகிழ்ச்சி பின்னணி

MI vs LSG
- Advertisement -

இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2021/22 சீசனின் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்ற மத்திய பிரதேசம் புதிய வரலாறு படைத்தது. அந்த அணிக்கு பந்துவீச்சில் சுழல் பந்துவீச்சாளர் குமார் கார்த்திகேயா 5 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றினார். இந்த தொடரில் மொத்தமாக 32 விக்கெட்டுகளை எடுத்த அவர் மத்திய பிரதேசத்தின் சரித்திர வெற்றிக்கு துருப்புச் சீட்டாக செயல்பட்டார்.

உத்திரபிரதேசத்தின் கான்பூரில் பிறந்த இவர் கிரிக்கெட் மீது இருந்த காதலால் ஆரம்ப காலங்களில் தொடர்ச்சியாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினார். ஆனால் அதற்கு அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கிரிக்கெட்டில் ஏதாவது சாதிக்காமல் வீடு திரும்ப மாட்டேன் என்ற சபதத்துடன் வீட்டை விட்டு வெளியேறி மத்திய பிரதேசத்துக்காக முதல்தர உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அந்த வெறியுடன் விஜய் ஹசாரே, சயீத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் அசத்திய இவரை சமீபத்திய ஐபிஎல் 2022 ஏலத்தில் 20 லட்சத்துக்கு மும்பை வாங்கியது.

- Advertisement -

வீட்டுக்கு வாப்பா:
அதில் 4 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் 5 விக்கெட்டுகளை 7.85 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து மும்பையின் நம்பிக்கை நட்சத்திர இளம் வீரராக ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார். மேலும் ஐபிஎல் போன்ற உலகத்தரம் வாய்ந்த தொடரில் மும்பை போன்ற வெற்றிகரமான அணிக்கு விளையாடியதை ஒரு சாதனையாக கருதிய அவர் ஐபிஎல் முடிந்ததும் வீடு திரும்புவேன் என்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். இந்நிலையில் ஏற்கனவே கூறியது போல் ஐபிஎல் தொடர் முடிந்தும் வீட்டுக்கு திரும்பாத அவர் ரஞ்சி கோப்பையில் விளையாடியதாகவும் இன்னும் நிறைய சாதிக்காமல் வீட்டுக்குத் திரும்பப் போவதில்லை என்றும் தற்போது தெரிவித்துள்ளார்.

கடந்த 9 வருடங்கள் 2 மாதங்களாக வீட்டிற்கு திரும்பாமல் அவ்வப்போது மொபைல் போனில் மட்டும் பேசும் தம்மிடம் காவல் துறையில் பணியாற்றி வரும் தனது தந்தை “வீட்டுக்கு வாப்பா” என்று அழைத்ததாக தெரிவிக்கும் அவர் கடுகளவு மட்டுமே சாதித்துள்ளதால் இன்னும் பெரிதாக சாதிக்காமல் வீட்டுக்கு போவதில்லை என்று மீண்டும் ஒரு வைராக்கியத்தை ஏற்றுள்ளார். இது பற்றி சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நான் எதிர்பார்த்த நிறைய சாதனைகளில் சிலவற்றை எட்டியுள்ளேன். ஆனால் நான் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சாதனையை இன்னும் எட்டவில்லை. தற்போது மக்களும் ரசிகர்களும் என்னை அடையாளம் தெரிந்துள்ளார்கள்”

- Advertisement -

“ஆரம்பகட்ட கடினமான நாட்களில் எனது பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் சந்தித்த முதல் நாளில் எனக்கு தேவையான துணி மணிகள், கிரிக்கெட் சம்பந்தமான செலவுகளை ஏற்பதாகக் தெரிவித்தபோது நான் அழுதேன். டெல்லியில் அவரை சந்தித்த போது என்னை உனது தந்தையாக நினைத்துக் கொள்ளுமாறு அவர் ஆதரவளித்தார். அவர் எப்போதும் எனக்கு கொடுப்பதை பற்றியே பேசுவார். இப்போதும் கூட எனக்கு அவர் துணை நிற்பது போல் வேறு யாரும் நிற்பதில்லை”

“ஏப்ரல் 1இல் வெளியேறிய நான் வீட்டை விட்டு வெளியேறி 9 வருடங்கள் 2 மாதங்கள் ஆகிறது. எனது வீடு கான்பூரில் உள்ளது. ஆனால் எனது தந்தை காவல் துறையில் இருப்பதால் அடிக்கடி பணியிடம் மாறிக்கொண்டிருப்பார். தற்போது அவர் ஜான்சியில் உள்ளார். எனக்கு ஒரு சகோதரர் இருந்தாலும் அவரை நான் பார்ப்பதில்லை. வீட்டிற்குச் செல்ல எனக்கு நேரம் கிடைத்தது. ஆனால் நான் கடைசியாக அப்பாவிடம் பேசியபோது “நீங்கள் வீட்டை விட்டு போய்விட்டீர்கள், ஏதாவது சாதித்திருந்தால் திரும்பி வாருங்கள்” என்று கூறினார். அதற்கு நான் “ஆம்” என்று ஒரு வார்த்தைதான் சொன்னேன். நான் ‘ஆம்’ என்று கூறியதால் நான் வீட்டிற்கு செல்லவில்லை. இன்னும் எதையாவது சாதித்த பின்புதான் வீட்டுக்குப் போவேன்” என்று கூறினார்.

- Advertisement -

அம்மாவின் அழுகை:
இந்த காலங்களில் தொலைபேசியில் தனது தாயிடம் பேசும்போது வீட்டுக்கு வரச் சொல்லி கண்ணீர் விடுவதால் அதை பார்க்க தம்மால் முடியவில்லை என்று மேலும் தெரிவிக்கும் குமார் கார்த்திகேயா அதை தவிர்ப்பதற்காக இப்போதெல்லாம் வீடியோ கால் பேசுவதை நிறுத்திவிட்டதாக வைராக்கியத்துடன் கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு.

“என்னைப் பார்ப்பதற்கு யாரும் வரவேண்டாமென குடும்பத்தாரை கேட்டுக் கொண்டுள்ளேன். எனது அம்மா அடிக்கடி என்னை வீட்டுக்கு வருமாறு சொல்லிக்கொண்டே இருக்கிறார். அதற்காக அவரை பொறுமையாக இருக்குமாறு கூறும் நான் சமாதானப்படுத்திக் கொண்டே நேரில் பார்க்க செல்லாமல் இருக்கிறேன்”

இதையும் படிங்க : கிரிக்கெட்டின் அதிர்ஷ்டம் நிறைந்த ராசியான மாதம் ஜூலையா – ரசிகர்களை வியக்க வைக்கும் ஒரு அலசல்

“மேலும் வீடியோ காலில் பேசினால் அவர் கண் கலங்குகிறார் என்பதால் அதை நிறுத்திவிட்டு குரல் அழைப்பு மட்டுமே செய்கிறேன். கடைசியாக ஐபிஎல் தொடரில் விளையாடிய போதும் ரஞ்சிக் கோப்பையை வென்ற போதும் அம்மாவிடம் வீடியோ காலில் பேசினேன். அதற்கு முன்பு கடந்த 2018இல் ரஞ்சி கோப்பையில் தேர்வான போது பேசியிருந்தேன்” என்று கூறினார். இந்தளவுக்கு வெறித்தனமான வைராக்கியத்துடன் இருக்கும் இவர் கிரிக்கெட்டில் நிறைய சாதிக்க நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

Advertisement