ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. துபாயில் நடைபெறும் அந்தப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் கோப்பையை வெல்லும் நோக்கத்துடன் பலப்பரிட்சை நடத்த உள்ளன. மறுபுறம் தொடரை நடத்தும் பாகிஸ்தான் பரிதாபமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தத் தொடரில் நடப்புச் சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே நியூசிலாந்து மற்றும் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்தது.
இறுதியில் வங்கதேசத்துக்கு எதிரானப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் சொந்த மண்ணில் நடந்த ஐசிசி தொடரில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாத அணி என்ற மோசமான உலக சாதனையுடன் பாகிஸ்தான் வெளியேறியது. முன்னதாக அந்தத் தொடரில் பரம எதிரி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் போராடாமலேயே தோல்வியை சந்தித்தது. அதனால் பாகிஸ்தான் வீரர்கள் கடுமையான விமர்சனத்தை சந்தித்தனர்.
ஸ்டைலான கொண்டாட்டம்:
அவர்களுக்கு மத்தியில் அப்ரார் அகமது எக்ஸ்ட்ரா விமர்சனத்தை சந்தித்தார் என்றே சொல்லலாம். ஏனெனில் இந்திய துவக்க வீரர் சுப்மன் கில் 46 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தார். அப்போது அவரை அப்ரார் அகமது அற்புதமான பந்தை வீசி கிளீன் போல்ட்டாக்கி அசத்தினார். அதனால் கில் ஏமாற்றத்துடன் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார்.
ஆனால் மறுபுறம் அப்ரார் அஹ்மத் ஸ்டைலாக கைகட்டிக் கொண்டு ஒரு பக்கமாக தலையை அசைத்து போ போ என்ற வகையில் அவரை அனுப்பி வைத்து விக்கெட்டை கொண்டாடினார். கடைசியில் பாகிஸ்தான் போராடாமலேயே தோல்வியை சந்தித்து வெளியேறியது. அதனால் கில் செமி ஃபைனல் விளையாடச் செல்வர் நீங்கள் வீட்டுக்கு செல்லுங்கள் என்று அப்ரார் அகமதுக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர்.
மன்னிப்பு கேட்பு:
இந்நிலையில் அப்படி கொண்டாடுவதை தம்முடைய வழக்கமான ஸ்டைலாக வைத்திருப்பதாக அப்ரார் அகமது கூறியுள்ளார். மேலும் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அப்படி கொண்டாடுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஒருவேளை அப்படி இருந்தால் மன்னிப்பு கேட்கும் அப்ரார் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அது என்னுடைய ஸ்டைல். அதில் எதுவும் தவறாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை”
இதையும் படிங்க: ஃபைனலில் இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து வெல்லவே வாய்ப்பிருக்கு.. பின்ச் சொன்னது பற்றி நாசர் ஹுசைன்
“அவ்வாறு கொண்டாடியதில் தவறு இருந்ததாக போட்டி நடுவர்கள் யாரும் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஒருவேளை அப்படிக் கொண்டாடியது யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக நான் மன்னிப்புடன் வருந்துகிறேன். யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் அல்ல” எனக் கூறினார். அவர் கூறுவது போல 2024 இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் அப்ரார் அகமது விக்கெட்டை எடுத்த போதெல்லாம் அப்படியே கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.



