அண்மையில் நடைபெற்று முடிந்த 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்த உலக கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக சர்வதேச டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த அபிஷேக் ஷர்மா இந்த தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று பலரும் தங்களது கணிப்புகளை வழங்கி இருந்தனர்.
அபிஷேக் சர்மாவின் தந்தைக்கு நம்பிக்கை அளித்த சஞ்சு சாம்சன் :
ஆனால் நடைபெற்று முடிந்த இந்த 2026 டி20 உலக கோப்பை தொடரானது அவருக்கு எதிர்பார்த்த வகையில் அமையாமல் சற்று ஏற்றத்தாழ்வு உடனே முடிவடைந்தது. ஏனெனில் இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் மூன்று போட்டிகளிலுமே தொடர்ந்து டக் அவுட்டாகிய அவரது பேட்டிங் ஃபார்ம் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்தன. அதோடு அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற பேச்சுக்களும் இருந்தது.
ஆனால் அவர்மீது நம்பிக்கை வைத்த இந்திய அணியின் நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியது. அதற்கு ஏற்றார் போல் அவரும் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 21 பந்துகளில் 52 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார். இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரின் போது தனது மகனின் பேட்டிங் ஃபார்ம் தடுமாற்றத்தை சந்தித்தபோது சஞ்சு சாம்சன் தான் தனக்கு நம்பிக்கை வழங்கியதாக அபிஷேக் சர்மாவின் தந்தை சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் சஞ்சு சாம்சனை சந்திக்கும்போது அபிஷேக் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் குறித்து வருத்தப்பட்டு என்ன ஆனது? என்று கேட்டேன். அப்போது சஞ்சு சங்சன் என்னிடம் “அங்கிள் நீங்கள் கவலைப்பட வேண்டாம்”, அபிஷேக் ஒரு மிகப்பெரிய வீரர். அவர் சாதாரணமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவரால் எந்த ஒரு அணிக்கு எதிராகவும் ஆதிக்கம் செலுத்தி விளையாட முடியும்.
இதையும் படிங்க : ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் – காரணம் என்ன?
அதை அவர் ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் காண்பித்துள்ளார். நிச்சயம் இந்திய அணிக்காக அவர் போட்டிகளை வெற்றி பெற்று கொடுப்பார். எனவே நீங்கள் அவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவருக்கான நேரம் வரும்போது அவர் பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அவர் ஒரு மிகச்சிறந்த வீரர் என எனக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினார் என அபிஷேக் ஷர்மாவின் தந்தை கூறியது குறிப்பிடத்தக்கது.



