
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்ற இந்திய அணியானது லீக் சுற்று போட்டிகளில் தோல்வியையே சந்திக்காமல் சூப்பர் போர் சுற்றுக்கு முன்னேறியது. அதன் பின்னர் சூப்பர் 4 சுற்றிலும் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய மூன்று அணிகளையும் வீழ்த்தி தோல்வியையே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுவிட்டது.
இப்படி இந்திய அணி இந்த தொடரில் தோல்வியையே சந்திக்காமல் இறுதி போட்டி வரை முன்னேற இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரரான அபிஷேக் சர்மா அளிக்கும் துவக்கமும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஒவ்வொரு போட்டியிலுமே மிகச்சிறப்பான அதிரடியான ஆட்டத்தை அபிஷேக் சர்மா வெளிப்படுத்தி உள்ளார்.
கடைசியாக நடைபெற்று முடிந்த மூன்று கோட்டிகளிலும் அரைசதம் அடித்த அவர் அற்புதமான பார்மை வெளிக்காட்டி உள்ளதால் நிச்சயம் இறுதி போட்டியிலும் இந்திய அணியின் வெற்றியில் பங்களிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. நேற்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த போட்டியில் 31 பந்துகளை சந்தித்த அவர் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் என 61 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
அவரது இந்த சிறப்பான ஃபார்ம் ஆசிய கோப்பையில் தொடர்ந்து வரும் வேளையில் ஏகப்பட்ட சாதனைகளையும் அவர் இந்த தொடரில் நிகழ்த்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் ஒரு மாபெரும் சாதனை ஒன்றினையும் முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
அந்த வகையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் மட்டும் 6 இன்னிங்ஸ்களில் 309 ரன்களை அடித்திருக்கும் அபிஷேக் ஷர்மா பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெறும் 11 ரன்களை அடித்தால் ஒரு டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக முதல் இடத்தில் இருக்கும் விராட் கோலியின் சாதனையை முறியடிப்பார்.
இதையும் படிங்க : ஆசிய கோப்பையில் 3 வீரராகவும், இலங்கை அணி சார்பாக 4 ஆவது வீரராகவும் – பதும் நிசாங்கா நிகழ்த்திய சாதனை
விராட் கோலி கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது ஒரே தொடரில் 319 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்து வருகிறது. அந்த சாதனையை முறியடிக்க இன்னும் அபிஷேக் சர்மாவுக்கு 11 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் நிச்சயம் இறுதிப்போட்டியில் அதனை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.