இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டாவது டி20 போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா அணியானது நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. அதன்படி இன்று மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
முகமது ரிஸ்வானின் சாதனையை முறியடித்த அபிஷேக் சர்மா :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.4 ஓவர்களில் வெறும் 125 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக 37 பந்துகளை சந்தித்த துவக்க வீரரான அபிஷேக் ஷர்மா 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 68 ரன்கள் குவித்து அசத்தினார். ஒருபுறம் மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் இந்த மைதானத்தில் ரன் குவிக்க தடுமாறிய வேளையில் அபிஷேக் ஷர்மா தனது மிகச் சிறப்பான பார்மை இந்த ஆட்டத்திலும் தொடர்ந்திருந்தார்.
இந்த போட்டியில் அவர் அடித்த இரண்டு சிக்ஸர்கள் மூலம் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான முகமது ரிஸ்வானின் மாபெரும் சாதனை ஒன்றினை தகர்த்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அபிஷேக் ஷர்மா நிகழ்த்திய சாதனை யாதெனில் :
ஒரே ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரராக முகமது ரிஸ்வான் முதலிடத்தில் இருந்து வந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு 26 டி20 போட்டிகளில் விளையாடிய ரிஸ்வான் 42 சிக்ஸர்களை விளாசியிருந்தார். இந்நிலையில் இந்த 2025 ஆம் ஆண்டு 14 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடியுள்ள அபிஷேக் ஷர்மா 43 சிக்சர்களை விளாசி அந்த சாதனையை தகர்த்துள்ளார்.
இதையும் படிங்க : இந்திய அணியை இவ்ளோ ஈஸியா வீழ்த்த இவரே காரணம்.. வெற்றிக்கு பிறகு – மிட்சல் மார்ஷ் மகிழ்ச்சி
இதன் மூலம் சூர்யகுமாருக்கு பின் ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்களை சர்வதேச டி20 போட்டிகளில் அடித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் 2023இல் சூரியகுமார் யாதவும் 17 இன்னிங்சில் 43 சிக்ஸர்கள் அடித்து அந்த சாதனையை படைத்துள்ளார். ஏற்கனவே ஐ.சி.சி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் அபிஷேக் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



