இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியானது இன்று அக்டோபர் 31-ஆம் தேதி மெல்போர்ன் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற இதுவே காரணம் : மிட்சல் மார்ஷ்
அதன்படி நடைபெற்று முடிந்த இந்த இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்தியா அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.4 ஓவர்களில் 125 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக அபிஷேக் சர்மா 68 ரன்களையும், ஹர்ஷித் ராணா 35 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை மிக எளிதாக எதிர்கொண்டு 13.2 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி சார்பாக மிட்சல் மார்ஷ் 46 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 28 ரன்களையும் குவித்தனர்.
ஆஸ்திரேலிய அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாஷ் ஹேசல்வுட் 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 13 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் கூறுகையில் :
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்றது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. ஜாஷ் ஹேசல்வுட் மிகச்சிறந்த பந்துவீச்சாளர். மைதானத்தில் சிறிதளவு சாதகம் இருந்தால் கூட அதனை பயன்படுத்தி விக்கெட்டுகளை எடுக்க கூடியவர். இந்த போட்டியில் அனைவருமே மிகச்சிறப்பாக பந்துவீசியிருந்தனர். தொடர்ச்சியான இடைவெளிகளில் இந்திய வீரர்களை வீழ்த்தியதால் எளிதில் வெற்றிபெற முடிந்தது.
இதையும் படிங்க : நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்த அபிஷேக் சர்மா.. தனி ஆளாக நின்று மிரட்டல் – விவரம் இதோ
டி20 உலககோப்பை தொடரானது அருகில் வந்து விட்டது. அதற்கும் நாங்கள் எங்களுடைய முழுமையான அணியை தயார் செய்ய வேண்டும். தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் சிறப்பான வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதோடு இளம் வீரர்களும் வருவதற்காக காத்திருக்கின்றனர். நல்ல திறமையான வீரர்களுடன் நாங்கள் பயணிக்க உள்ளோம் என மிட்சல் மார்ஷ் கூறியது குறிப்பிடத்தக்கது.



