இந்திய கிரிக்கெட் அணியின் இளம் துவக்க வீரரான அபிஷேக் ஷர்மா ஐ.பி.எல் போட்டிகளில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியதால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்த ஆண்டு அறிமுகமாகினார். தான் அறிமுகமாகிய பின்னர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்த அவர் அதற்கு அடுத்து கடந்த பல போட்டிகளாகவே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்தார். இதனால் அவர் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் இருந்து வந்தன.
உத்தப்பா வாக்கை காப்பாற்றிய அபிஷேக் சர்மா :
அதோடு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரிலும் இடம் பிடித்திருந்த அபிஷேக் ஷர்மா முதல் இரண்டு போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே மூன்றாவது போட்டியில் அவரை விளையாட வைக்கக்கூடாது என்றெல்லாம் பெரிய அளவில் விமர்சனங்கள் அவர் மீது இருந்து வந்தன.
ஆனாலும் இந்திய அணியின் நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்து மூன்றாவது போட்டியில் விளையாட வாய்ப்பு அளித்தது. அந்த வகையில் நேற்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற வேளையில் இந்த போட்டியில் துவக்க வீரராக விளையாடிய அவர் 25 பந்துகளை சந்தித்து மூன்று பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர் என 50 ரன்கள் குவித்து தன் மீது இருந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதிலும் குறிப்பாக அவரது அதிரடியான துவக்கம் காரணமாக இந்திய அணி 219 ரன்கள் என்கிற பெரிய ரன் குவிப்பை வழங்கியிருந்தது. இந்நிலையில் ராபின் உத்தப்பா அபிஷேக்சர்மா குறித்து கூறிய ஒரு கருத்தினை நேற்றைய தனது ஆட்டத்தின் மூலம் அபிஷேக் ஷர்மா உண்மையாக்கி காண்பித்தார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அபிஷேக் சர்மாவின் பார்ம் குறித்து பேசியிருந்த ராபின் உத்தப்பா கூறுகையில் :
2000 ஆவது ஆண்டுகளில் சேவாக் எவ்வாறு இந்திய அணிக்காக அதிரடியான துவக்கத்தை கொடுத்தாரோ அதேபோன்று அபிஷேக் சர்மாவும் அதிரடியான தூக்கத்தை கொடுக்கக்கூடியவர். அவரிடம் இருந்து தொடர்ச்சியான நிலையான ஆட்டத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவர் சிறப்பாக ஆடும் பட்சத்தில் நிச்சயம் அது மேட்ச் வின்னிங் ஆட்டமாக அதிரடியாக இருக்கும்.
இதையும் படிங்க : வெறும் 59 போட்டிகளிலேயே பும்ராவை பின்னுக்கு தள்ளி அசத்திய அர்ஷ்தீப் சிங் – டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை
அவர் துவக்க வீரராக களம் இறங்கும் பட்சத்தில் அதிரடியான ஓப்பனிங் கிடைக்கும் என்றும் ராபின் உத்தப்பா கூறியிருந்தார். அவர் கூறியது போன்றே நேற்றைய போட்டியில் அபிஷேக் ஷர்மா துவக்க ஓவர்களில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன் குவிப்பை இரட்டிப்பாக்கியது குறிப்பிடத்தக்கது.



