இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென்னாபிரிக்காவில் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. கடைசியாக 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடிப்பு இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதற்கு அடுத்தபடியாக தற்போது இவ்விரு அணிகளும் மோத உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்முறை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான புதிய இந்திய அணி தென்னாப்பரிக்காவை எதிர்கொள்கிறது.
அவருடைய தலைமையில் அபிஷேக் ஷர்மா உள்ளிட்ட இளம் வீரர்களுடன் இந்திய அணி விளையாட உள்ளது. அந்தத் தொடரின் முதல் போட்டி தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் 2007 டி20 உலகக் கோப்பையில் இதே டர்பன் மைதானத்தில் இங்கிலாந்தின் ஸ்டுவர்ட் ப்ராடுக்கு எதிராக யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்தார்.
குருவும் சிஷ்யனும்:
அப்படியே தன்னுடைய குருவான யுவராஜ் சிங் வரலாறு படைத்த மைதானத்தில் தாம் இந்தியாவுக்கு விளையாட உள்ளதை நினைத்து பெருமைப்படுவதாக அபிஷேக் சர்மா கூறியுள்ளார். மேலும் யுவராஜை பார்த்து தாம் கிரிக்கெட்டில் விளையாட துவங்கியதாகவும் அபிஷேக் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“இங்கே நான் இப்போது தான் வருகிறேன். ஆனால் இதை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். தற்போது இங்கே வந்துள்ளது என்னுடைய கனவு நிஜமாகும் தருணமாகும். 2007இல் இங்கே யுவராஜ் சிங் அடித்த 6 சிக்ஸர்களால் நான் உத்வேகத்தை பெற்றேன். இங்கே முதல் நாள் வந்ததும் அவர் எந்த பகுதியில் இருந்து சிக்ஸர்களை அடித்தார் என்பதை பார்க்க முயற்சித்தேன்”
பெருமைப்பட வைப்பேன்:
“இந்த மைதானத்தில் அவர் அனைத்து திசைகளிலும் சிக்ஸர்கள். அது சிறந்த நினைவு. அப்படியே என்னுடைய குடும்பத்துடன் பார்த்து விட்டு தெருவில் இந்தியாவின் வெற்றியை எங்கள் தெருவில் கொண்டாடியது நினைவிருக்கிறது. அப்போது டர்பன் மைதானத்தில் விளையாடும் வாய்ப்பை பெறுவேன் என்று நினைக்கவில்லை. ஆனால் அப்போது கிரிக்கெட்டில் விளையாடுவது என்னுடைய கேரியராக இருக்கும் என்று நினைத்தேன்”
இதையும் படிங்க: கல்லு மனசா உங்களுக்கு? ரோஹித் சர்மாவும் மனுஷன் தான்.. கவாஸ்கருக்கு ஆரோன் பின்ச் பதிலடி
“இங்கே நான் விளையாடப் போவதை யுவராஜ் சிங் பார்ப்பார் என்று நம்புகிறேன். அவரை பார்த்து தான் நான் உத்வேகம் அடைந்தேன். எனவே அவரை இந்தப் போட்டியில் நான் பெருமைப்பட வைப்பேன் என்பதே அவருக்கு என்னுடைய மெசேஜ்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்த தொடரின் முதல் போட்டி நவம்பர் எட்டாம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



