இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற ஆஸ்திரேலியா தொடரை இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்ற செய்திகள் காணப்படுகின்றன. குறிப்பாக தம்முடைய சொந்த காரணங்களுக்காக ரோகித் சர்மா விலக உள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கு முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
கல் மனசா:
குறிப்பாக முதல் போட்டியில் இந்திய அணியை தலைமை தாங்கவில்லையெனில் ரோகித் சர்மா எஞ்சிய 4 போட்டிகளிலும் கேப்டனாக விளையாடக்கூடாது என்று கவாஸ்கர் கூறியிருந்தார். மேலும் ஜஸ்ப்ரித் பும்ரா முழுமையாக 5 போட்டிகளிலும் இந்தியாவை வழி நடத்த வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். அவ்வாறு செய்வது நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியிலிருந்து முழுமையான கேப்டன் தலைமையில் விளையாடி இந்தியா மீண்டு வர உதவும் என்றும் கவாஸ்கர் கூறியிருந்தார்.
இந்நிலையில் உங்களுக்கு கல் மனசா என்ற வகையில் அவருக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் பதிலடி கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கவாஸ்கர் கருத்தை நான் முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருக்கிறார். ஒருவேளை உங்களுடைய குழந்தை பிறப்புக்காக நீங்கள் வீட்டில் இருக்க வேண்டிய நிலைமை வந்தால் அதை தாராளமாக செய்யலாம்”
ரோஹித்துக்கு ஆதரவு:
“அந்த அழகான தருணத்திற்காக நீங்கள் போதுமான நேரத்தை எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினார். அதாவது ரோகித் சர்மாவுக்கு குழந்தை பிறப்பது போன்ற ஏதேனும் முக்கியமான சொந்த காரணம் இருக்கும் என்று பின்ச் தெரிவித்துள்ளார். எனவே அது போன்ற தருணத்தில் ரோகித் சர்மா வீட்டில் இருப்பது தவறில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆர்.சி.பி இன்னும் என்னை ஒதுக்கல.. என்கிட்ட தெளிவாக பேசுனாங்க – கிளென் மேக்ஸ்வெல் பகிர்வு
சொல்லப்போனால் 2020 – 21 ஆஸ்திரேலிய தொடரில் முதல் போட்டியிலேயே 36க்கு ஆல் அவுட்டான இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அப்போது கேப்டனாக இருந்த விராட் கோலி தனது குழந்தை பிறப்புக்காக நாடு திரும்பினார். ஆனால் அதன் பின்பும் ரகானே தலைமை அபாரமாக விளையாடிய இந்தியா கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.



