ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றிக்கு அபிஷேக் ஷர்மா முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருதை வென்றார். அத்தொடரில் இறுதிப்போட்டியை தவிர்த்து மற்ற அனைத்து போட்டிகளிலும் எதிரணிகளை அடித்து நொறுக்கிய அவர் நல்ல துவக்கத்தைக் கொடுத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
ஆசியக் கோப்பையை முடித்த கையோடு தம்முடைய குருவான யுவராஜ் சிங்கை சந்தித்த அபிஷேக் சர்மா ஆசியும் பெற்றார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுப்மன் கில்லும் தாமும் ஒரே சமயத்தில் விளையாடத் துவங்கியதாக அபிஷேக் கூறியுள்ளார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து அசத்த தவறியதால் தமக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
குருவின் ஆதரவு:
அப்போது உன்னை இந்திய அணிக்காக விளையாட வைத்து காட்டுகிறேன் என்று யுவ்ராஜ் தம்மிடம் சொன்னதாக அபிஷேக் தெரிவித்துள்ளார். அதோடு நிற்காத அவர் தமக்குத் தேவையான பயிற்சிகளையும் நம்பிக்கையையும் கொடுத்து சொன்னதை இன்று செய்து காட்டியுள்ளதாகவும் அபிஷேக் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் அந்த சமயத்தில் நானும் கொஞ்சம் தடுமாறிக் கொண்டிருந்தேன். ஐபிஎல் தொடரில் கூட என்னால் சீராக அசத்த முடியவில்லை. அதனால் பிளேயிங் லெவனில் கூட எனக்கு இடம் கிடைக்கவில்லை. சுப்மன் கில் (2020இல்) ஏற்கனவே இந்தியாவுக்காக விளையாடத் துவங்கி விட்டார். அதனால் நீ பின்தங்கி விழுந்து விட்டாய், உன்னுடைய குரூப்பில் இருக்கும் மற்ற அனைவரும் முன்னோக்கி சென்று விட்டனர் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்”
செய்து காட்டிய யுவ்ராஜ்:
“அப்போது பாஜி (யுவ்ராஜ்) என்னை வீட்டுக்கு அழைத்தார். சுப்மன் மற்றும் நான் அவரது வீட்டுக்குச் சென்று அவருடன் உணவு அருந்தினோம். அப்போது அவர் என்னிடம் உன்னை நான் தேசிய அணிக்காக தயாராக்கவில்லை, உன்னை நான் ஐபிஎல் தொடருக்காகவும் தயாராக்கவில்லை, இந்த சூழ்நிலையை கையாளவும் உன்னை நான் தயாராக்கவில்லை. உன்னை நான் இந்தியாவுக்காக விளையாடத் தயாராக்குகிறேன்”
இதையும் படிங்க: இப்படி ஒரு டீமை வச்சிக்கிட்டு நாங்க அந்த பைனல்ல ஆடலனா அதுதான் ஏமாற்றம் – சுப்மன் கில் பளீர்
“இந்தியாவுக்காக நீ போட்டிகளை வென்று கொடுக்க வேண்டும். இதை எழுதி வைத்துக்கொள் என்று சொன்னார். அதிகபட்சமாக அடுத்த 2, 3 வருடங்களில் நீ விளையாடுவாய் என்றும் அவர் சொன்னார். அப்படிப்பட்ட வார்த்தைகள் நான் குருவாக நினைத்தவரிடம் இருந்து வந்தது. அவரே அப்படி சொன்னால் என் மேல் அவர் நிறைய தன்னம்பிக்கை வைத்திருக்கிறார் என்று அர்த்தம். அதனால் நானும் இந்தியாவுக்காக விளையாடி பெரியளவில் அசத்துவதற்கான லட்சியத்தை உருவாக்கினேன். அதையே நான் செய்வேன், அதை நான் சாதிப்பேன்” என்று கூறினார்.



