
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அப்போது நடைபெற்று முடியும் தொடர்களுக்கு மத்தியில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்குமான தரவரிசை பட்டியலையும் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு டி20 போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அப்படி வெளியான புதிய தரவரிசை பட்டியலானது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் வெளியான டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இந்திய அணிக்கு அடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அடுத்தடுத்த 3,4,5 ஆகிய இடங்களை பிடித்துள்ளன.
அதேபோன்று ஐசிசி வெளியிட்டுள்ள ஆடவர் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்த தொடரில் அவர் சற்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் இறுதி போட்டியில் 21 பந்துகளில் 52 ரன்கள் குவித்ததன் மூலமாக 875 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். ஆனாலும் அவரது முதலிடம் சற்று ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.
ஏனெனில் இதுவரை அபிஷேக் ஷர்மாவிடம் யாரும் நெருங்க முடியாத அளவிற்கு முன்னிலையில் இருந்த வேளையில் தற்போது இஷான் கிஷன் அவரைவிட வெறும் 4 புள்ளிகள் மட்டுமே குறைவாகப் பெற்று 871 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். இந்த உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி போட்டி மற்றும் இறுதி போட்டி என மிக முக்கியமான வெற்றிகளுக்கு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாகவே தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
இதையும் படிங்க : தோனி என்ன ரோலில் விளையாடணும்னு அவங்க தான் முடிவு செய்யணும் – காசி விஸ்வநாதன் கருத்து
மேலும் அடுத்து வரும் டி20 தொடரில் இஷான் கிஷன் அசத்தும் பட்சத்தில் அபிஷேக் சர்மாவின் முதலிடம் பறிபோகும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரை சிக்கந்தர் ராசா முதலிடத்திலும், இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.