இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா கடந்த ஆண்டு ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் துவக்க வீரராக இந்திய அணியில் இடம் பிடித்து தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார் என்று கூறலாம். இதுவரை இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 26 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் அபிஷேக் ஷர்மா 25 இன்னிங்ஸ்களில் 2 சதம் மற்றும் 6 அரைசதம் என 936 ரன்களை குவித்துள்ளார்.
ஷிகர் தவானின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அபிஷேக் சர்மா :
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் கூட இந்திய அணி சரிவை சந்தித்தபோது தனது அதிரடியான ஆட்டத்தை அபிஷேக் ஷர்மா வெளிக்காட்டி இருந்தார். குறிப்பாக நடைபெற்று முடிந்த அந்த போட்டியில் 37 பந்துகளை சந்தித்த அவர் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 68 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
இந்த 2025-ஆம் ஆண்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அபிஷேக் சர்மா டி20 போட்டிகளில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருப்பதோடு மட்டுமின்றி 200 ஸ்டிரைக் ரேட்டுடன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த ஆண்டு மட்டும் அபிஷேக் ஷர்மா இதுவரை 14 டி20 போட்டியில் மட்டுமே விளையாடி இருந்தாலும் அதில் 680 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் மூன்றாவது டி20 போட்டியில் விளையாட இருக்கும் அபிஷேக் ஷர்மா மேலும் 10 ரன்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் முன்னாள் இந்திய வீரரான ஷிகர் தவானின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்க காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் :
இந்திய டி20 அணியின் இடது கை துவக்க வீரராக கடந்த 2018-ஆம் ஆண்டு 17 போட்டிகளில் விளையாடிய ஷிகர் தவான் 689 ரன்கள் குவித்திருந்தார். அதுவே ஒரு ஆண்டில் இந்திய அணியின் இடது கை துவக்க வீரராக அடிக்கப்பட்ட அதிக ரன்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் அவரது இந்த சாதனையை இன்று அபிஷேக் சர்மா முறியடிக்க 10 ரன்கள் மட்டுமே தேவை.
இதையும் படிங்க : 3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் செய்யப்பட்டுள்ள 3 மாற்றங்கள் – கேப்டன் சூரியகுமார் அறிவிப்பு
அதனால் நிச்சயம் இந்த போட்டியில் அபிஷேக் சர்மா அந்த சாதனையை முறியடிப்பார் என்பது உறுதி. அதோடு மேலும் அவர் இந்த போட்டியில் 64 ரன்களை அடிக்கும் பட்சத்தில் விரைவாக டி20 போட்டிகளில் 1000 ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.



