
இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4 போட்டிகளில் முடிவில் 3 – 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அந்த நிலையில் இத்தொடரின் கடைசிப் போட்டி பிப்ரவரி இரண்டாம் தேதி மும்பையில் இருக்கும் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடியாக விளையாட முயற்சித்த போதிலும் 16 (7) ரன்களில் அவுட்டானார். ஆனால் மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா இங்கிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்கினார். அடுத்ததாக வந்த திலக் வர்மா அதிரடியாக விளையாட முயற்சித்து 24 (15) ரன்களில் அவுட்டானார்.
அதற்கடுத்ததாக வந்த சூரியகுமார் 2 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா 17 பந்துகளில் 50 ரன்கள் தொட்டார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டாவது வேகமான சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இதற்கு முன் 2021 டி20 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிராக கேஎல் ராகுல், 2022 கௌகாத்தியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சூரியகுமார் தலா 18 பந்துகளில் 50 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.
அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த சிவம் துபே தம்முடைய பங்கிற்கு அதிரடியாக 30 (13) ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து சிக்ஸர்களை மழையாக பொழிந்து மிரட்டலாக பேட்டிங் செய்த அபிஷேக் ஷர்மா 37 பந்துகளில் 100 ரன்கள் தொட்டார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டாவது வேகமான சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இதற்கு முன் 2023 செஞ்சூரியன் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜான்சன் சார்லஸ் 39 பந்துகளில் அடித்ததே முந்தைய சாதனை. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் பாண்டியா 9, ரிங்கு 9, அக்சர் படேல் 15 ரன்களில் அவுட்டானார்கள். இறுதியில் அபிஷேக் ஷர்மாவும் 7 பவுண்டரி 13 சிக்சருடன் 135 (54) ரன்களை 250 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார்.
இதையும் படிங்க: ஆஸியில் சொதப்பிய ரோஹித், கோலி சாம்பியன்ஸ் ட்ராபியில் அசத்துவாரு.. காரணம் இது தான்.. கங்குலி ஆதரவு
அவருடைய அதிரடியால் 20 ஓவரில் இந்தியா 247-9 ரன்கள் குவித்தது. இதன் வாயிலாக இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய அதிகபட்ச டி20 ஸ்கோரை பதிவு செய்து இந்தியா சாதனை படைத்தது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.