உலகம் முழுவதிலும் 2025 ஆங்கில வருடம் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. அதனால் 2025 காலண்டர் வருடத்தில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நட்சத்திர நபர்களின் விவரங்களை பிரபல கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் படி இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட வீரராக 14 வயது கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சி முதலிடம் பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
பீகாரை சேர்ந்த அவர் வெறும் 14 வயதில் ஐபிஎல் தொடரில் 35 பந்தில் சதமடித்து உலக சாதனை படைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அதே போல அண்டர்-19, இந்தியா ஏ அணிக்காக இதுவரை விளையாடிய போட்டிகளில் அதிரடியாக பேட்டிங் செய்த சூரியவன்சி நிறைய சாதனங்களைப் படைத்துள்ளார். அதனால் 14 வயதில் எப்படி இவரால் அசத்த முடிகிறது? என்ற ஆச்சரியத்துடன் மக்கள் அவரை கூகுளில் அதிகம் தேடியிருப்பார்கள் என்றே சொல்லலாம்.
அடித்த அடியில்:
அப்படியே இந்தியாவுக்கு பக்கத்து நாடான பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரரின் பெயரையும் கூகுள் வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் பாபர் அசாம் முதலில் இருப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஏனெனில் விராட் கோலியை விட பாபர் சிறந்தவர் என்று அந்நாட்டவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஆனால் எளிதில் அவரை முந்திய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரராக கூகுளில் முதலிடம் பிடித்துள்ளார். உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய அவருக்கு கடந்த வருடம் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் எதிரணிகளை அடித்து நொறுக்கிய அபிஷேக் சர்மா இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறினார்.
மொத்தமாக தேடிய பாகிஸ்தான்:
அப்படிப்பட்ட திறமையான அவர் கடந்த 2025 ஆசியக் கோப்பையில் லீக் சுற்றில் பாகிஸ்தானை அடித்து நொறுக்கி இந்தியாவின் வெற்றிக்கு காரணமானார். அடுத்து நடைபெற்ற சூப்பர் 4 சுற்றிலும் பாகிஸ்தானை தெறிக்க விட்ட அபிஷேக் இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதனால் ஃபைனலில் பாகிஸ்தான் வெல்ல அபிஷேக்கை ஆரம்பத்திலேயே அவுட்டாக்க வேண்டுமென வாசிம் அக்ரம், சோயப் அக்தர் போன்ற முன்னாள் வீரர்கள் ஆலோசனைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அதிர்ஷ்டத்தால் பும்ராவை அடிச்சுட்டு தற்பெருமை டாக்குமென்ட்ரி வேற.. பாக் வீரரை நேரலையில் செய்த ஆகாஷ் சோப்ரா
அந்தளவுக்கு பாகிஸ்தானுக்கு பயத்தைக் காட்டிய அபிஷேக் இறுதிப் போட்டியில் சொற்ப ரன்னில் அவுட்டானார். ஆனால் அதையும் தாண்டி ஏராளமான திறமைக் கொண்ட இந்திய அணி ஃபைனலில் பாகிஸ்தானை தோற்கடித்து கோப்பையை வென்றது. ஆனாலும் அத்தொடரில் அடித்த அடியில் அபிஷேக் சர்மா யார் மற்றும் அவருடைய திறமை, வரலாறு என்ன? என்பதை மொத்த பாகிஸ்தானும் சேர்ந்து கூகுளில் முதலிடம் வருமளவுக்கு தேடியுள்ளது குறிப்பிடத்தக்கது.



