நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. அதன் மூலம் வரலாற்றிலேயே முதல் முறையாக நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் 12 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக இந்தியா சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றுள்ளது.
அந்த தோல்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சீனியர்களாக பொறுப்புடன் விளையாடி பெரிய ரன்கள் குவிக்காதது முக்கிய காரணமானது. அந்த தோல்விகளால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற 3வது போட்டியிலும் அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரிலும் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கொஞ்சம் பொறுங்க:
இந்நிலையில் கடினமாக உழைப்பதை கொஞ்சமும் குறைக்காத விராட் கோலி, ரோஹித் சர்மா 3வது போட்டியில் பாராட்டும் அளவுக்கு அசத்துவார்கள் என்று இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்ப்பதற்காக மும்பையில் நடக்கும் 3வது போட்டியில் இந்தியா சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைத்துள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. ஆனால் அது போன்ற எந்த சதியையும் தாங்கள் செய்யவில்லை என்று அபிஷேக் நாயர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் மற்றும் விராட் கோலி மீது அன்பை தவிர்த்து வேறு எதையும் நான் பார்க்கவில்லை. சில நேரங்களில் நீண்ட காலம் சிறப்பாக செயல்படும் வீரர்கள் சுமாரான நேரத்திற்குள் செல்லும் போது புதிய இடத்தை உருவாக்கி மீண்டும் வரும் வாய்ப்புகள் உருவாகும். எனவே அவர்கள் தங்களுடைய வேலையில் ஈடுபட்டுள்ளனர்”
பிட்ச்சை மாத்தல:
“அனைவரும் கடினமாக உழைக்கின்றனர். அணியில் இருக்கும் அனைவருமே சிறப்பாக செயல்பட விரும்புகிறார்கள். விராட் கோலி அல்லது ரோஹித் அல்லது சுப்மன் கில் போன்ற அனைவருமே சிறப்பாக செயல்படவே விரும்புகின்றனர். அதற்கான உழைப்பு அங்கே இருக்கிறது. அணுகுமுறையும் நன்றாக இருக்கிறது. அதனால் மகத்தான வீரர்கள் கூட கடினமான காலங்களில் சிறப்பாக செயல்படும் வரை நீங்கள் கொஞ்சம் பொறுமையுடன் இருக்க வேண்டும்”
இதையும் படிங்க: ஜெய்ஸ்வால் மட்டுமே நாயகன்.. தூக்கி எரியப்பட்ட விராட், ரோஹித்.. பும்ரா மகுடத்தை பறித்த ரபாடா
“கொஞ்சம் பொறுமையாக இருந்தால் விராட் கோலி, ரோஹித் போன்றவர்கள் நாம் பாராட்டும் அளவுக்கு அசத்துவார்கள். நாங்களும் பிட்ச்சை தயாரிக்கவே விரும்புவோம். ஆனால் நாங்கள் அதை செய்வதில்லை. மைதான பாராமரிப்பாளர்கள் செய்வார்கள். சுழல் அல்லது வேகம் உட்பட பிட்ச் எதற்கு ஆதரவாக இருந்தாலும் ஒரு அணியாக நாங்கள் எங்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற முயற்சிக்கிறோம்” என்று கூறினார்.