இந்திய கிரிக்கெட் அணிக்காக கேஎல் ராகுல் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக விளையாடி வருகிறார். 2017 காலகட்டங்களில் ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த அவர் ஷிகர் தவானை பின்னுக்குத் தள்ளினார். அதனால் 2019 உலகக் கோப்பைக்குப் பின் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கிய ராகுல் நல்ல ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார்.
அதன் காரணமாக அவரை அடுத்த கேப்டனாக வளர்க்க நினைத்த பிசிசிஐ துணை கேப்டன்ஷிப் பொறுப்பைக் கொடுத்தது. அதே போல ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக 17 கோடிக்கு வாங்கப்பட்ட ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். நாளடைவில் அந்த இடங்களை தக்க வைத்துக்கொள்ள நினைத்த ராகுல் மெதுவாக விளையாடத் துவங்கினார்.
ஆமைவேக ராகுல்:
குறிப்பாக 2022 டி20 உலகக் கோப்பையில் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக விளையாடிய ராகுல் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார். அதன் காரணமாக டி20 அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவர் ஐபிஎல் தொடரிலும் மெதுவாக விளையாடினார். குறிப்பாக ஒரு போட்டியில் ஆமை வேகத்தில் விளையாடி தோல்விக்கு காரணமானதால் லக்னோ அணியின் உரிமையாளர் ராகுலை பொதுவெளியில் திட்டும் வகையில் பேசினார்.
அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பெரிய ரன்களை குவிக்கத் தவறிய அவருக்கு ரிஷப் பண்ட் விபத்தை சந்தித்ததால் ஒருநாள் அணியில் மட்டுமே விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் 2023 உலகக்கோப்பையில் 400க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த ராகுல் கடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றினார். அதே வேகத்தில் 2025 ஐபிஎல் தொடரில் அசத்திய ராகுல் தற்போதைய இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் சதத்தை அடித்து பழைய ஃபார்முக்கு வந்துள்ளார்.
பின்னணியில் ரோஹித்:
இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பைக்கு பின் பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பேற்ற தம்மிடம் ராகுலை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்று ரோகித் சர்மா சொன்னதாக அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அந்த வேலையில் பொறுப்பேற்றதும் ரோஹித் சர்மாவுடன் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. ரோஹித் சொன்ன விஷயங்களில் கே.எல். ராகுலை மீண்டும் அட்டாக் செய்யும் வகையில் விளையாட வைக்க வேண்டும், ராகுலின் சிறந்த ஆட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதாகும்”
இதையும் படிங்க: டீ குடிப்பதற்குள் இங்கிலாந்தை ஓட விடும்.. கோலியின் டெக்னிக்கை கில் ஃபாலோ பண்ணனும்.. மஞ்ரேக்கர்
“அதற்காக முதலில் நான் அவருடைய திறன்களை மாற்றியமைக்க முயற்சித்தேன். பின்னர் அவரது மனநிலையைத் தெரிந்து கொள்ள முயற்சித்தேன்” என்று கூறினார். முன்னதாக 2025 ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ராகுல் தம்முடைய பேட்டிங்கை மாற்ற அபிஷேக் நாயருடன் சேர்ந்து கடினமாக பயிற்சிகளை செய்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.



