அவருக்கே 10 வருசம் சான்ஸ் கிடைக்கல, நேத்து வந்த உங்களுக்கு எப்படி கிடைக்கும் – சர்ப்ராஸ் கான் தேர்வை விளக்கும் அபினவ் முகுந்த்

Abinav Mukund Sarfaraz Khan
- Advertisement -

வரும் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளம் கிரிக்கெட் வீரர் சர்ப்ராஸ் கான் தேர்வு செய்யப்படாதது நிறைய ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. ஏனெனில் கடந்த 2 சீசன்களாக ரஞ்சிக்கோப்பையில் 928, 982 ரன்களை விளாசிய அவர் தற்போது நடைபெற்று வரும் தொடரில் 556 ரன்களை எடுத்து தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 80+ பேட்டிங் சராசரியை வைத்துள்ள அவர் உலக அளவில் முதல் தர கிரிக்கெட்டில் ஜாம்பவான் டான் பிராட்மேனனுக்கு பின் அதிக பேட்டிங் சராசரியை கொண்டுள்ள வீரராக அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

Sarfaraz-Khan

- Advertisement -

இருப்பினும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுகிறார் என்பதற்காக உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் 45க்கும் குறைவான பேட்டிங் சராசரியை கொண்டிருந்தும் சூரியகுமார் யாதவ், இசான் கிசான் தேர்வு செய்யப்படும் போது இவருக்கு மட்டும் வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன் என்பதே அனைவரது கேள்வியாக இருக்கிறது. சொல்லப்போனால் கடந்த ரஞ்சிக்கோப்பை ஃபைனலில் சதமடித்த போது கடந்த மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்படுவீர்கள் என்று தம்மிடம் தலைவர் சேட்டன் சர்மா தெரிவித்ததாகவும் இறுதியில் ஆஸ்திரேலிய தொடரில் கூட தேர்வு செய்யவில்லை என்றும் சமீபத்தில் சர்பராஸ் கான் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

முகுந்த் விளக்கம்:
மேலும் வரலாற்றில் இன்சமாம்-உல்-ஹக், அர்ஜுனா ரனதுங்கா ஆகியோர் உடல் எடையை பொய்யாக்கி அபாரமாக செயல்பட்டதால் பிட்னெஸை அடிப்படையாக வைத்து சர்ப்ராஸ் கானை புறக்கணிக்க கூடாது என்று சுனில் கவாஸ்கர் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் தேர்வுக்குழுவை விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் 2010இல் அறிமுகமானாலும் இதர வேகப்பந்து வீச்சாளர்கள் தேவையான அளவு இருந்ததால் 12 வருடங்களாக ஜெயதேவ் உனட்கட் வாய்ப்பு பெறாத போல தற்போது சர்பராஸ் கான் பேட்டிங் செய்யும் இடத்தில் ஏற்கனவே இந்திய அணியில் தேவையான வீரர்கள் இருப்பதாலேயே இதுவரை அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தமிழக வீரர் அபினவ் முகுந்த் கூறியுள்ளார்.

Jaydev-Unadkat

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் வேண்டுமென்று ஒதுக்கப்படுவதாக எனக்கு தோன்றவில்லை. சர்பராஸ் கான் இந்திய அணியில் இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஏனெனில் இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடிக்கும் அளவுக்கு அவர் தேவையான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் அவரது ரஞ்சிக் கோப்பை செயல்பாடுகளுக்கு மதிப்பு கொடுக்கப்படவில்லை என்று கேட்டால் ஆம் கொடுக்கப்படவில்லை”

- Advertisement -

“ஆனால் அதே ரஞ்சி கோப்பையில் 2 – 3 சீசன்களாக செயல்பட்ட காரணத்தாலேயே ஜெயதேவ் உனட்கட் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். எனவே இந்த நிகழ்வு இந்திய அணியில் எந்த மாதிரியான இடம் காலியாக உள்ளது என்பதை பொறுத்து வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய தொடரின் முதலிரண்டு போட்டிகளில் தற்சமயத்தில் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கும் சூரியகுமார் யாதவ் அசத்துவார் என்று கருதி தேர்வுக்குழுவினர் அவரை தேர்வு செய்திருக்கலாம்”

Abhinav Mukund

“அதற்கு எந்த விருப்பு வெறுப்பும் நான் தெரிவிக்கவில்லை. ஆனால் நீங்கள் இந்திய அணியில் விளையாடுவதற்கு முதலில் உங்களுக்கான இடம் அங்கே காலியாகி உங்களுக்காக திறக்க வேண்டும். நீங்கள் ஆயிரக்கணக்கான ரன்களை அடித்தாலும் உங்களை விட ஒருவர் சிறப்பாக செயல்பட்டால் அதில் எந்த பயனுமில்லை. அதே சமயம் நீங்கள் செய்யும் வேலைக்கு தகுந்த இடம் இந்திய அணியில் ஏற்பட வேண்டும் அல்லவா? எனவே அது தான் இந்த விஷயத்தில் நடந்துள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க: வீடியோ : தெறித்த பவுலிங், கண்ணிமைக்கும் 0.05 நொடி நேரத்தில் கேட்ச் பிடித்த பாண்டியா – நியூஸிலாந்தை சுருட்டிய இந்தியா

அவர் கூறுவது போல டெஸ்ட் அணியில் மிடில் ஓவர்களில் அதிரடியாக விளையாடும் ரிசப் பண்ட் காயமடைந்த காரணத்தாலேயே அவரைப் போல் அதிரடியாக விளையாடும் வீரர் தேவை என்ற கண்ணோட்டத்துடன் சூரியகுமார் மற்றும் இசான் கிசான் தேர்வு செய்யப்பட்டதாக ஏற்கனவே தேர்வுக்குழு தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement