வீடியோ : தெறித்த பவுலிங், கண்ணிமைக்கும் 0.05 நொடி நேரத்தில் கேட்ச் பிடித்த பாண்டியா – நியூஸிலாந்தை சுருட்டிய இந்தியா

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில் போராடி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக திகழும் நியூசிலாந்தை முதல் போட்டியில் மைக்கல் பிரேஸ்வெல் போராட்டத்தை தாண்டி சுப்மன் கில் இரட்டை சதத்துடன் போராடி தோற்கடித்த இந்தியா ஜனவரி 21ஆம் தேதியன்று நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் களமிறங்கியது. சட்டீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் ராய்ப்பூர் நகரில் மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அளவில் பெரிதாகவும் பெரிய பவுண்டரிகளையும் கொண்ட இம்மைதானத்தில் முதல் முறையாக ஒரு சர்வதேச போட்டி நடைபெறும் நிலையில் பிட்ச் பவுலிங்க்கு சாதகமாக இருந்ததை ஆரம்பத்திலேயே கணித்த ரோகித் சர்மா சரியான முடிவை எடுத்தார் என்று சொல்லலாம். ஏனெனில் பேட்டிங்கை துவங்கிய நியூசிலாந்துக்கு முதல் ஓவரிலேயே ஃபின் ஆலனை டக் அவுட் செய்த முகமது ஷமி மிரட்டலை கொடுத்தார். அடுத்த வந்த ஹென்றி நிக்கோலஸ் 2 ரன்களில் முகமத் சிராஜ் அவுட்டாக்கிய நிலையில் அடுத்து வந்த டார்ல் மிட்சேல் 1 ரன்னில் ஷமியின் வேகத்தில் ஆட்டமிழந்து சென்றார்.

- Advertisement -

தெறித்த பவுலிங்:
அதனால் 9/3 என தடுமாறிய அந்த அணிக்கு நங்கூரமாக விளையாடும் முயன்ற மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வே 7 (16) ரன்னில் ஹர்டிக் பாண்டியாவிடம் அவுட்டான போது அடுத்த ஓவரிலேயே கேப்டன் டாம் லாதமும் ஷார்துல் தாகூரிடம் 1 (17) ரன்னில் சரணடைந்தார். அதன் காரணமாக 15/5 என படு மோசமான தொடக்கத்தைப் பெற்று திண்டாடிய நியூசிலாந்து 50 ரன்கள் தாண்டுமா என்று அந்நாட்டு ரசிகர்கள் கவலையடைந்த போது கடந்த போட்டியில் வெளுத்து வாங்கிய அதே மைக்கேல் பிரேஸ்வெல் இம்முறை கிளன் பிலிப்ஸ் உடன் சேர்ந்து நங்கூரத்தை போட்டு காப்பாற்ற போராடினார்.

இம்முறை மெதுவாகவே பேட்டிங் செய்த அவர் 19 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 6வது விக்கெட்டுக்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய போதிலும் 4 பவுண்டரியுடன் 22 (30) ரன்களில் வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கினார். இருப்பினும் மறுபுறம் நிலைத்து நின்ற கிளன் பிலிப்ஸ் அடுத்து வந்த மிட்சேல் சாட்னருடன் கைகோர்த்து 7வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்பை வெளிப்படுத்தினார். அதனால் 100 ரன்களை தாண்டி நியூசிலாந்து மானத்தை காப்பாற்றிக் கொண்டாலும் மிட்சேல் சாட்னர் 3 பவுண்டரியுடன் 27 (39) ரன்களிலும் கிளன் பிலிப்ஸ் போராடி 36 (52) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

இறுதியில் அடுத்து வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் 34.3 ஓவரில் வெறும் 108 ரன்களுக்கு நியூசிலாந்து சுருண்டது. அந்த அளவுக்கு பவுலிங்க்கு சாதகமாக இருந்த மைதானத்தில் புதிய பந்தை ஸ்விங் செய்து அனல் தெறிக்க பந்து வீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

முன்னதாக இப்போட்டியில் நியூசிலாந்தின் அதிரடி தொடக்க வீரர் டேவோன் கான்வே ஹர்திக் பாண்டியா வீசிய 10வது ஓவரில் நேராக பவுண்டரி அடிக்க முயற்சித்தார். ஆனால் அது நேராக ஹர்திக் பாண்டியாவை நோக்கி தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் சென்றது. அந்த வாய்ப்பை வீணடிக்காத வகையில் பந்து வீசி விட்டு ஓட்டத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா 0.05 வினாடி கண்ணிமைக்கும் நேரத்தில் லாவகமாக இடது கையில் பிடித்து அப்படியே டைவ் அடித்து தன்னை பேலன்ஸ் செய்து கேட்ச் பிடித்தார்.

இதையும் படிங்க: பாண்டியாவை அடுத்த கேப்டனா போடுவதில் தப்பில்ல ஆனா மீண்டும் அந்த தவறை பண்ணாதீங்க – பிசிசிஐக்கு கபில் தேவ் அட்வைஸ்

சாதாரண வேகத்தில் பார்க்கும் போது அது கேட்ச் என்றே தெரியாத அளவுக்கு அற்புதமாக செயல்பட்ட பாண்டியாவின் செயல்பாடுகள் ரிப்ளையில் பார்க்கும் போது மிகச்சிறப்பாக இருந்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதைத்தொடர்ந்து 109 ரன்கள் எடுத்தால் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரையும் ஆரம்பத்திலேயே கைப்பற்றி விடலாம் என்ற நிலையுடன் இந்தியா விளையாடி வருகிறது

Advertisement