சர்வதேச வீரர்களிடம் தேசப்பற்று, அர்ப்பணிப்பை கெடுப்பதே இந்தியா தான் – அப்துல் ரசாக் அதிரடி விமர்சனம், நடந்தது என்ன

- Advertisement -

உலகின் நம்பர் ஒன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த மார்ச் 31 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்கி கோடைகாலத்தில் ரசிகர்களை பரபரப்பான போட்டிகளுடன் மகிழ்வித்து வருகிறது. கடந்த 2008இல் சாதாரண டி20 தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் பல பரிணாமங்களை கண்டு விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைக்கு நிகரான தரத்திற்கு பஞ்சமில்லாத இந்த தொடரில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வருமானமாக கிடைப்பதால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளை காட்டிலும் இந்தியா பணக்கார வாரியமாக ஜொலித்து வருகிறது.

அதே சமயம் இத்தொடரில் வெறும் 2 மாதங்கள் விளையாடுவதற்கு பல கோடி ரூபாய்கள் சம்பளமாக கிடைப்பதால் இப்போதெல்லாம் நாட்டுக்காக விளையாடுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு நிறைய இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் முன்னுரிமை கொடுப்பதை பார்க்க முடிகிறது. அத்துடன் இந்தியாவுடன் இருக்கும் நட்பு காரணமாக இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு வாரியங்கள் தங்களது வீரர்களை ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு முழுமையான அனுமதியையும் கொடுக்கின்றன.

- Advertisement -

ரசாக் விமர்சனம்:
அந்த வரிசையில் இந்தியாவில் ஐபிஎல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்குகிறது. அதில் ஐபிஎல் தொடரில் கேன் வில்லியம்சன் காயமடைந்த நிலையில் டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி விளையாடுகிறது. இருப்பினும் ட்ரெண்ட் போல்ட், லாக்கி பெர்குசன், டிம் சௌதீ, கிளன் பிலிப்ஸ், டேவோன் கான்வே போன்ற முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதால் நாட்டுக்காக நடைபெறும் இந்த தொடரில் விளையாடவில்லை.

இந்நிலையில் தங்கள் நாட்டுக்கு 2வது தர அணியை நியூசிலாந்து அனுப்பியுள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது முதன்மை வீரர்கள் அடங்கிய முதன்மை பாகிஸ்தான் அணி விளையாடியதாக அவர் கூறியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரால் முக்கிய நியூஸிலாந்து வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்கவில்லை என்று கூறும் அவர் இப்போதெல்லாம் சர்வதேச கிரிக்கெட்டில் அந்தந்த நாட்டு வீரர்கள் தேசப்பற்றுடன் விளையாடாமல் போவதற்கு இந்தியா நடத்தும் ஐபிஎல் தொடரே காரணம் என்று விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் இந்த சுற்றுப்பயணத்திற்கு நியூசிலாந்து தங்களுடைய வலுவான முதன்மை அணியை அனுப்பவில்லை. சிலர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்று விட்டனர். சிலர் காயமடைந்துள்ளனர். அதனால் இந்த தொடரில் எந்த பரபரப்பும் இருக்கப் போவதில்லை. ஆனால் நியூசிலாந்தில் நாங்கள் டெஸ்ட் தொடரில் விளையாடிய போது முதன்மை வீரர்கள் கொண்ட வலுவான அணியை அனுப்பினோம். அதனாலேயே அந்த தொடரில் சுவாரசியமான போட்டிகள் நடைபெற்றன”

“இருப்பினும் தற்போதைய நியூசிலாந்து அணியில் வலுவான வீரர்கள் இல்லை. அது சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நாங்கள் அனுப்பிய அணியை போல் உள்ளது. நியூசிலாந்தின் முக்கிய வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடரில் மிகவும் பிஸியாக விளையாடுகிறார்கள். அதை விட ஒரு சர்வதேச தொடர் நடைபெறும் போது இந்த நியூசிலாந்து வீரர்கள் எப்படி ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான ஒப்புதலை வாங்கினார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. பொதுவாக ஒவ்வொரு வீரருக்கும் தங்களுடைய தேசிய அணி தான் முதன்மையானதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் தற்போதைய நியூசிலாந்து அணி இளம் வீரர்ளுடன் இங்கே வந்துள்ளது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க:என்னை விமர்சித்தவர்களின் வாயை மூடிவிட்டேன். சதம் அடித்த மகிழ்ச்சியில் இந்திய ரசிகர்களை விமர்சித்த – ஹாரி ப்ரூக்

முன்னதாக எல்லை பிரச்சினை காரணமாக ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இல்லையேல் பாகிஸ்தான் வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள். அதை விட சமீப காலங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்திடம் சொந்த மண்ணிலேயே தோற்ற பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் துபாயில் மண்ணை கவ்வியது. அப்படிப்பட்ட நிலையில் டாம் லாதம் தலைமையிலான இளம் நியூசிலாந்து அணிக்கு எதிராக வெல்லும் வேலையை பார்க்குமாறு இந்திய ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement