ஜிதேஷ் சர்மா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது கடைசியாக நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மிகப் பெரிய இலக்கினை மிக எளிதாக துரத்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் பெங்களூரு அணியானது புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கும் முன்னேறியது. அதன் காரணமாக அடுத்ததாக இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் முதலாவது குவாலிபயர் போட்டியிலும் விளையாட இருக்கிறது.
ஆர்.சி.பி அணியை விமர்சிப்பது தவறு : ஏ.பி.டி
கடந்த 18 ஆண்டுகளாகவே ஒருமுறை கூட ஐ.பி.எல் கிரிக்கெட் கோப்பையை வெல்லாத ஆர்.சி.பி அணியானது இம்முறை நிச்சயம் கோப்பையை விராட் கோலிக்காக வெல்ல வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அதன் காரணமாக ஆர்.சி.பி அணிக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
ஆனால் கடைசியாக நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது பெங்களூரு அணி முதலில் பந்துவீசுகையில் வர்ணனையாளர்கள் ஆர்.சி.பி அணியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்கள். அதிலும் குறிப்பாக பண்ட் சதம் அடித்த பிறகு ஆர்.சி.பி அணியின் பந்துவீச்சாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அழுத்தத்திற்கு உள்ளாகி விட்டார்கள். இந்த போட்டியில் ஆர்.சி.பி அணியின் பந்துவீச்சு மிக மோசமாக இருக்கிறது. அவர்கள் வழக்கமான தோல்விக்கு பாதைக்கு திரும்பியுள்ளார்கள் என வர்ணனையாளர்கள் கடுமையாக சாடியிருந்தனர்.
இந்நிலையில் வர்ணனையாளர்களின் இந்த பேச்சை கவனித்துள்ள ஆர்.சி.பி அணியின் முன்னாள் வீரரான ஏ.பி.டி வில்லியர்ஸ் பெங்களூரு அணிக்கு ஆதரவாகவும், வர்ணனையாளர்களை விமர்சித்தும் தனது கோபத்தினை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது வர்ணனையை நான் கவனித்தேன். அனைவருமே ஆர்.சி.பி அணிக்கு எதிராக மோசமான கருத்துக்களை நேரலையில் வெளிப்படுத்தி உள்ளார்கள்.
ஒரு போட்டியின் போது முதல் பாதியை பார்த்து விட்டு வர்ணனையாளர்கள் இப்படி பேசுவது தவறு. அந்த மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்ததால் முதல் பாதியில் லக்னோ அணி ரன்களை குவித்தது. அதேவேளையில் இரண்டாம் பாதியில் ஆர்.சி.பி அணியும் தான் அந்த மைதானத்தில் மிகச் சிறப்பாக சேசிங் செய்து வெற்றி பெற்றார்கள். எனவே முதல் பாதியை வைத்து அணியின் செயல்பாடுகளை வர்ணனையாளர்கள் பேசக்கூடாது.
இதையும் படிங்க : என் பொண்ணு ஏன் ரிட்டையரானீங்கன்னு? கேட்டதற்கு.. விராட் கோலி சொன்ன பதில் இதான்.. ஹர்பஜன் சிங்
போட்டியின் சூழலில் நியாயமாக என்ன நிலை இருக்கிறதோ அதை வைத்தே பேச வேண்டும். அதை விடுத்து ஆர்.சி.பி அணியை குறை கூறும் வகையிலே வர்ணனையாளர்கள் பேசியது தவறு. களத்தில் என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்யாமல் பேசக்கூடாது என வர்ணனையாளர்களை விமர்சித்தும், ஆர்.சி.பி அணியை ஆதரித்தும் ஏ.பி.டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.



