
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடியது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடியதற்கு பின்னர் நான்கு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன. பின்னர் சூப்பர் 8 சுற்று முடிவில் நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.
அந்த வகையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்ற வேளையில் தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்து நியூசிலாந்து அணியும், இங்கிலாந்து அணியை தோற்கடித்து இந்திய அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த மாபெரும் டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியானது மார்ச் 8-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் குவித்தது. பின்னர் தொடர்ந்து விளையாடி நியூசிலாந்து அணி 159 ரன்கள் சுருண்டதால் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது மூன்றாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்று அசத்தியது.
மேலும் நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்ற இந்திய அணி மீண்டும் ஒருமுறை கோப்பையை கைப்பற்றி அடுத்தடுத்த டி20 உலக கோப்பைகளை வென்ற முதல் அணியாகவும் சாதனையை நிகழ்த்தியிருந்தது. இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் 5 போட்டிகளில் விளையாடி 321 ரன்கள் குவித்த வேளையில் அவருக்கு இந்த தொடருக்கான தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் சஞ்சு சாம்சனை விட ஜஸ்ப்ரீத் பும்ரா தான் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் என முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரான ஏபிடி வில்லியர்ஸ் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த உலக கோப்பை தொடரில் முக்கியமான கட்டங்களில் பந்துவீசிய பும்ரா ஆட்டத்தின் போக்கையே மாற்றிய பந்துவீச்சாளர்.
இதையும் படிங்க : தோனி இல்லாமல் இந்த விடயத்தை நெனச்சி கூட பாக்க முடியல.. இதுதான் அவருக்கு கடைசி – இர்பான் பதான் உருக்கம்
அவருடைய பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிக்கு பெருமளவு உதவியது. இதன் காரணமாக அவரே தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் என்று தான் கருதுவாக ஏ.பி.டி வில்லியர்ஸ் கூறினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அவருக்கு இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.