ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா வென்றது. ஏற்கனவே 2024 டி20 உலகக் கோப்பையையும் இந்தியா வென்றதன் வாயிலாக தோனிக்கு பின் ஒன்றுக்கும் மேற்பட்ட கோப்பைகளை வென்ற கேப்டனாக ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார். மேலும் ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார் என்று சொல்லலாம்.
இந்நிலையில் 37 வயதானாலும் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு கோப்பையை வென்றுக் கொடுத்துள்ள ரோகித் சர்மா ஓய்வு பெற வேண்டிய அவசியமில்லை என்று ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். அதற்கான காரணங்களை அவர் விவரித்தது பின்வருமாறு. “ஒருநாள் கிரிக்கெட்டில் மற்ற கேப்டன்களுடன் ஒப்பிடும் போது ரோகித் சர்மாவின் வெற்றி சராசரி விகிதத்தை பாருங்கள். அது கிட்டத்தட்ட 74%”
எதுக்கு ஓய்வு பெறணும்:
“கடந்தக் காலங்களில் விளையாடிய மற்ற கேப்டன்களை விட சிறந்தது. இப்படியே விளையாடினால் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச் சிறந்த கேப்டனாக ரோகித் சர்மா செல்வார். தற்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை என்று சொன்ன அவர் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் ஏன் ஓய்வு பெற வேண்டும்? கேப்டனாக மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் அவர் சிறந்த ரெக்கார்டை வைத்துள்ளார்”
“இறுதிப் போட்டியில் 83 பந்துகளில் 76 ரன்கள் அடித்த அவர் உச்சகட்ட அழுத்தத்தில் இந்தியாவின் வெற்றிக்கான நல்ல அடித்தளத்தைக் கொடுத்தார். எனவே ரோகித் ஓய்வு பெறுவதற்கும் விமர்சனங்களை சந்திக்கவும் காரணம் இல்லை. அதை அவருடைய சாதனைகள் பேசுகின்றன. இது போக அவர் தன்னுடைய ஆட்டத்தை மாற்றியுள்ளார். இதற்கு முன் பவர் பிளே ஓவர்களில் கொஞ்சம் மெதுவாக விளையாடிய அவருடைய ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருந்தது”
ஏபிடி பாராட்டு:
“ஆனால் 2022க்குப்பின் 115 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் அவர் சிறந்த துவக்கத்தைக் கொடுத்து வருகிறார். அப்படி நீங்கள் உங்களுடைய ஆட்டத்தை மாற்றுவது சிறந்த விஷயம் நீங்கள் எப்போதுமே எதையாவது கற்றுக் கொண்டு முன்னேறலாம். ஒரு இந்திய ரசிகராக நீங்கள் ரோகித் சர்மாவால் பெருமைப்பட வேண்டும். அவரது பயணம் எப்போதும் சீராக இருப்பதில்லை”
இதையும் படிங்க: 2027 ஒருநாள் உலககோப்பையை குறிவைத்து ரோஹித் சர்மா எடுத்துள்ள அதிரடி முடிவு – இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்
“வெவ்வேறு ஃபார்மட்டில் வெவ்வேறு ஃபார்மை கொண்டிருக்கும் அவர் மேடு பள்ளங்களைக் கடந்து வருகிறார். ஆனால் ஐசிசி தொடர் போன்ற கொண்ட பெரியப் போட்டிகளில் அவர் முன் நின்று இந்திய அணியை வழி நடத்துகிறார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2027 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு ரோகித் சர்மா முயற்சிப்பார் என்று உறுதியாக நம்பலாம்.