
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் கோப்பையை முத்தமிடும் லட்சியத்துடன் விளையாடி வருகிறது. புதிய கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் விளையாடும் அந்த அணி 11 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்றுள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஜொலிக்கும் பெங்களூரு பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
அந்த வெற்றிக்கு நம்பிக்கையை நாயகன் விராட் கோலி 505* ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றி வருகிறார். மேலும் இந்த வருடம் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அவர் ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார். அந்த வகையில் விராட் கோலி தன்னை சாம்பியன் பிளேயர் என்பதை நிரூபித்து வருகிறார் என்றே சொல்லலாம்.
முன்னதாக விராட் கோலி என்றாலே நங்கூரமாக விளையாடி சீராக பெரிய ரன்கள் குவிப்பதற்குப் பெயர் போனவர். இருப்பினும் பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்பதற்காக விராட் கோலி மெதுவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுகிறார் என்ற விமர்சனங்களை சந்திப்பது வாடிக்கையாகும். சொல்லப்போனால் கடந்த வருடம் ராஜஸ்தானுக்கு எதிராக 67 பந்தில் விராட் கோலி 100 ரன்கள் அடித்தது பெங்களூரு வெற்றிக்கு உதவவில்லை.
அப்போது குறைந்த ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய விராட் கோலி தான் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக வீரேந்திர சேவாக் விமர்சித்திருந்தார். அதே போல சுனில் கவாஸ்கர், சஞ்சய் மஞ்ரேக்கர் போன்ற முன்னாள் வீரர்கள் பலமுறை விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட்டை விமர்சித்துள்ளார்கள். அந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிராக விராட் கோலி 62 ரன்களை 188 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி பெங்களூரு வெற்றியில் பங்காற்றினார்.
இந்நிலையில் சிஎஸ்கே அணியை நொறுக்கிய விராட் கோலி தன்னுடைய பேட்டால் சேவாக், கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களின் விமர்சன வார்த்தைகளை அவர்களையே சாப்பிட வைத்துள்ளதாக ஏபி டீ வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அங்கே விராட் எப்போதும் இருப்பார். விராட் ஆர்சிபி அணியின் மிஸ்டர் பாதுகாப்பாளர்”
இதையும் படிங்க: தோனிக்காக 4 கோடி ரூல்ஸை மாற்றியது.. இந்திய கிரிக்கெட்டை சீரழிக்கும்.. பிசிசிஐக்கு கவாஸ்கர் கோரிக்கை
“விராட் இருக்கும் போது பயப்படத் தேவையில்லை. விராட் அருகில் இருக்கும் போது அஞ்சத் தேவையில்லை. அது தான் கதை. அது எப்போதும் மாறியதில்லை. ஊடகங்களில் இருக்கும் மக்களே உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். எனக்கு யானையின் மூளை இருக்கிறது என்பதை மறக்கவில்லை. இங்கே இருக்கும் விமர்சகர்களே, உங்களை நான் விரும்புகிறேன். ஆனால் விராட் மெதுவாக விளையாடுகிறார் என்று நீங்கள் சொன்னீர்கள் அல்லவா? இங்கே விராட் கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியுள்ளார். நீங்கள் சொன்னதைச் சாப்பிடுங்கள்” என்று கூறியுள்ளார்.