ஐசிசி 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் கடைசி நேரத்தில் துணைக் கேப்டன் சுப்மன் கில் கழற்றி விடப்பட்டது பலரையும் மகிழ்ச்சியடைய வைத்தது. ஏனெனில் கடைசியாக விளையாடிய 18 சர்வதேச டி20 போட்டிகளில் அவர் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் மோசமான ஃபார்மில் இருந்து வருகிறார்.
இருப்பினும் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தால் அவருக்கு உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அணியை விட யாரும் பெரியது கிடையாது என்று கருதிய தேர்வுக்குழு அவரை கழற்றி விட்டது. அதே போல இசான் கிசான், ரிங்கு சிங் ஆகியோர் கடைசி நேரத்தில் தேர்வு செய்யப்பட்டதும் பலரையும் பாராட்ட வைத்தது.
ராணாவால் தவறிய வாய்ப்பு:
அதே சமயம் ஜிதேஷ் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்காதது சிலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் 2026 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் முகமது சிராஜ் தேர்ந்தெடுக்கப்படாதது தமக்கு ஏமாற்றமளிப்பதாக தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். 8வது இடத்தில் விளையாடக்கூடிய ஹர்ஷித் ராணா கணிசமாக பேட்டிங் செய்யக்கூடியவர் என்பதற்காக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தொடர்ச்சியாக வாய்ப்பளித்து வருகிறார்.
அதனால் சிராஜ்க்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு கிடைக்காமல் போனது ஏமாற்றமளிப்பதாக டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும் தங்கள் நாட்டில் நடைபெறும் 2027 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு சிராஜ்க்கு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விரைவில் நடைபெறும் நியூஸிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சிராஜ் இடம் பிடித்துள்ளதை நாம் பார்க்கிறோம்”
2027 உலகக் கோப்பை வாய்ப்பு:
“இருப்பினும் டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைக்காத அதிர்ஷ்டம் இல்லாத வீரர்களில் அவரும் ஒருவர். அது அணியின் சமநிலையை வைத்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் உங்களிடம் பும்ரா, அர்ஷ்தீப் ஆகியோர் இருக்கிறார்கள். ராணா கொஞ்சம் பேட்டிங் செய்வார். எனவே உங்களுக்கு 3 சீம் வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்”
இதையும் படிங்க: அன்று ஜடேஜா, சுந்தரை கேலி செய்த இங்கிலாந்து வீரர்கள் தான்.. இன்று ஆஸியில் திண்டாடுறீங்க.. கவாஸ்கர்
“சிராஜ் வெறும் பவுலராக மட்டுமே விளையாடுவார். அதனால் மேற்கொண்டு இந்திய அணி அதிகமாக சீம் பந்து வீச்சில் கவனம் செலுத்தவில்லை. சுழல் பந்து வீச்சாளர்களில் கவனம் செலுத்துகிறார்கள். எனவே சீம் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை எடுத்தால் அது போனஸ் போல அமையும். அதனால் சிராஜ்க்கு துரதிஷ்டவசமாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் குறைந்தபட்சம் ஒருநாள் அணியில் வருங்காலத்தை நோக்கிச் செல்கையில் அவர் 2027 உலகக் கோப்பையின் திட்டத்தில் அங்கமாக இருக்கிறார்” என்று கூறினார்.



