
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது அக்டோபர் 19-ஆம் தேதி பெர்த் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த முதல் ஒருநாள் போட்டியில் கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் இடைவெளிக்கு பின்னர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாட இருப்பதினால் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடரானது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு இவ்விரு ஜாம்பவான்களுக்கும் இந்த ஆஸ்திரேலியா தொடர் மிக முக்கியமான தொடராகவும் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒன்றாக ஓய்வை அறிவித்த ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 2027 உலக கோப்பையை கருத்தில் கொண்டு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட முடிவு செய்துள்ளனர்.
ஆனால் அவர்களது வயது மூப்பு காரணமாகவும், அடுத்த உலக கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதினாலும் இந்திய அணி நிர்வாகம் அவர்களது தேர்வில் இனி கெடுபிடி காட்டும் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் அனுபவ வீரர்களான அவர்கள் தொடர்ச்சியாக தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அடுத்த உலக கோப்பை தொடரில் விளையாடுவார்கள் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஆரோன் பின்ச் : ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் எப்படி பயமின்றி அதிரடியாக விளையாடி வருகிறாரோ அதேவழியில் அவரை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ரோகித் சர்மா அணியின் கேப்டனாக சுயநலமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் எந்த ஒரு தனிப்பட்ட சாதனையையும் கருத்தில் கொள்ளாமல் முதல் 10 ஓவர்களில் அடித்து விளையாடினார். அதன் காரணமாக இந்திய அணி ஆரம்பத்திலேயே நல்ல துவக்கத்தை பெற்று வெற்றிகளை குவித்து வருகிறது. தற்போது அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தாலும் தொடர்ச்சியாக அவரது அதிரடியான ஆட்டத்திற்கு இந்திய அணி அனுமதிக்க வேண்டும். அப்படி அவர் அதிரடியாக விளையாடும் பட்சத்தில் அது இந்திய அணிக்கும் நல்லது.
இதையும் படிங்க : விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இனியும் புரூவ் பண்ணனுமா? காமெடி பண்ணாதீங்க – ராஜ்குமார் சர்மா ஓபன்டாக்
கடந்த காலங்களில் ரோஹித் சர்மா ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தி தன்னுடைய திறனை நிரூபித்துள்ளார். எனவே அவர் அதிரடியாக விளையாடும் அனைத்து உரிமையும் அவரிடம் உள்ளது. அவரின் இயல்பான ஆட்டத்தை விளையாட அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஆரோன் பின்ச் கூறியது குறிப்பிடத்தக்கது.