ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் திடீர் ஓய்வு.ரசிகர்கள் வருத்தம் – காரணம் இதோ

australianteam
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் நாட்டுக்காக நீண்ட காலம் விளையாட வேண்டும் என்ற லட்சியத்துடன் களமிறங்கும் அனைத்து வீரர்களாலும் சச்சினை போல் நீண்ட காலம் விளையாடி சாதிக்க முடிவதில்லை. அதே போல் பார்மை இழந்து விமர்சனங்களை சந்தித்தாலும் விராட் கோலியை போல் சோதனைகளை கடந்து சாதிக்க முடிவதில்லை. போதாக்குறைக்கு சமீப காலங்களில் அதிகப்படியான டி20 லீக் வருகையால் பணிச்சுமையால் நிறைய வீரர்கள் முன்கூட்டியே இளம் வயதிலேயே ஓய்வு பெறுகிறார்கள். அந்த வரிசையில் இணைந்துள்ள ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் மற்றும் கேப்டன் ஆரோன் பின்ச் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதாக இன்று திடீரென அறிவித்துள்ளார். விக்டோரியாவைச் சேர்ந்த இவர் கடந்த 2013இல் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்கும் அதிரடி தொடக்க வீரராக தன்னை அடையாளப்படுத்தினார்.

அதனால் உலக அளவில் ரசிகர்களிடம் பிரசித்தி பெற்ற இவர் இதுவரை 146 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5401 ரன்களை 39.42 என்ற சராசரியில் எடுத்துள்ளார். மேலும் 17 சதங்களையும் அடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த ஆஸ்திரேலிய 3வது பேட்ஸ்மேனாக ரிக்கி பாண்டிங் (29), டேவிட் வார்னர் (18), மார்க் வாக் (18) ஆகியோருக்கு பின் சாதனையும் படைத்துள்ளார். அதே போல் ஆஸ்திரேலியா வென்ற 2015 உலகக் கோப்பையில் விளையாடி உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தையும் வென்ற அவர் 2017இல் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையில் களமிறங்கிய ஆஸ்திரேலியா இதுவரை பங்கேற்ற 54 போட்டிகளில் 30 வெற்றிகள் 24 தோல்விகள் என 50% க்கும் மேற்பட்ட சராசரியில் நல்ல வெற்றிகளை கண்டுள்ளது.

- Advertisement -

சுமாரான பார்ம்:
தற்போது நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் அவரது தலைமையில் முதல் 2 போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா 2 – 0* என்ற கணக்கில் கோப்பையை கைபற்றி முன்னிலை வகிக்கிறது. இருப்பினும் சமீப காலங்களில் பெரிய ரன்களை குவிக்க முடியாமல் பார்மின்றி தவிக்கும் அவர் சமீபத்திய ஜிம்பாப்வேக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் தற்போதைய நியூசிலாந்து தொடரிலும் சுமாராக செயல்பட்டு வருவது நிறைய விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

அதிலும் கடைசி 7 ஒருநாள் போட்டிகளில் 5, 5, 1, 15, 0, 0, 0 என சொற்ப ரன்களை மட்டுமே எடுத்த அவர் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் டக் அவுட்டானது மிகப்பெரிய விமர்சனங்களை எழுப்பியது. அதனால் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் தமது அணிக்கு பாரமாகவும் இருக்க விரும்பாத ஆரோன் பின்ச் 2023இல் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் புதுமையான தரமான ஆஸ்திரேலிய அணி உருவாவதற்கு இப்போதே 35 வயதிலேயே ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது பற்றி பிரியா மனதுடன் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த பயணம் அற்புதமான நினைவுகளைக் கொண்ட சிறந்த பயணமாக இருந்தது. நான் ஆஸ்திரேலிய அணி சார்பில் சில வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருநாள் போட்டிகளில் விளையாடியதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அதே போல் நான் விளையாடிய வீரர்களுடனும் அணியுடனும் இருந்ததற்கு ஆசீர்வதிக்கப் பட்டிருக்க வேண்டும்”

“இருப்பினும் அடுத்த வருடம் உலக கோப்பைக்கு எங்களுடைய அணி தயாராவதற்கு மற்றொருவரிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டிய நேரம் இதுவாகும். என்னுடைய இந்த பயணத்தில் உதவியும் ஆதரவும் கொடுத்த அனைவருக்கும் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

சுமாரான பார்மில் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ள ஆரோன் பின்ச்க்கு ஆஸ்திரேலிய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர். இதைத் தொடர்ந்து செப்டம்பர் 11ஆம் தேதியான நாளை கேரின்ஸ் நகரில் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியுடன் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஆரோன் பின்ச் விடைபெறுகிறார்.

இதையும் படிங்க : PAK vs SL : பைனலுக்கு முன்பாக ட்விஸ்ட் கொடுத்த இலங்கை, ஆசிய கோப்பையை வெல்லப்போவது யார்

டி20 கேப்டன்:
இருப்பினும் டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்த ஆஸ்திரேலியாவுக்கு கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி முதல் முறையாக கோப்பையை வென்று கொடுத்த அவர் விரைவில் தங்களது நாட்டில் நடைபெறும் 2022 டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க தொடர்ந்து கேப்டனாக செயல்பட உள்ளார். அந்த வகையி்ல் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடும் அவர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement