PAK vs SL : பைனலுக்கு முன்பாக ட்விஸ்ட் கொடுத்த இலங்கை, ஆசிய கோப்பையை வெல்லப்போவது யார்

SL vs PAK Babar Azam
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் 6 அணிகள் பங்கேற்ற நிலையில் ஹாங்காங், வங்கதேசம் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியன. அத்துடன் அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் நடப்பு சாம்பியன் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ரசிகர்கள் அதிர்ச்சியடையும் வகையில் வெளியேறிய கையுடன் ஆப்கானிஸ்தானும் பாதியிலேயே வெளியேறியது. மறுபுறம் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அசத்திய பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அந்த நிலைமையில் செப்டம்பர் 9ஆம் தேதியான நேற்று நடைபெற்ற சம்பிரதாய கடைசி சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின.

பைனலுக்கு முன்னோட்டமாக துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மென் முஹம்மது ரிஸ்வான் 14 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 28/1 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு நங்கூரத்தை போட முயன்ற பக்கார் ஜமான் 18 ரன்களிலும் கேப்டன் பாபர் அசாம் 2 பவுண்டரியுடன் 30 (29) ரன்களிலும் அவுட்டாகி மேலும் பின்னடைவை கொடுத்தனர். அதை மேலும் பயன்படுத்திய இலங்கை குஷ்தில் ஷா 4, நவாஸ் 26, ஆசிப் அலி 0 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி அசத்தியது.

- Advertisement -

சுருண்ட பாகிஸ்தான்:
அதனால் முழுமையான 20 ஓவர்கள் தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 121 ரன்களுக்குள் சுருண்டது. இலங்கை சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ஹசரங்கா 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 122 என்ற சுலபமான இலக்கை துரத்திய இலங்கைக்கு முதல் ஓவரிலேயே குஷால் மெண்டிஸ் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க அடுத்து களமிறங்கிய குணதிலகாவும் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். போதாக்குறைக்கு அடுத்து களமிறங்கிய டி சில்வாவும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதனால் 29/3 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு 4வது விக்கெட்டுக்கு தொடக்க வீரர் நிஷாங்காவுடன் 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த பனுகா ராஜபக்சா 24 (19) ரன்களில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சனாகா 1 பவுண்டரி 2 சிக்சருடன் 21 (16) ரன்கள் குவித்து வெற்றியை உறுதிசெய்து ஆட்டமிழந்தார். அதை வீணடிக்காமல் அடுத்து களமிறங்கிய ஹசரங்கா 10* (3) ரன்களும் மறுபுறம் 5 பவுண்டரி 1 சிக்சருடன் கடைசி வரை அவுட்டாகாமல் பேட்டிங் செய்த நிசாங்கா 55* (48) ரன்களும் எடுத்து பினிஷிங் கொடுத்தனர்.

- Advertisement -

இலங்கையின் ட்விஸ்ட்:
அதனால் 17 ஓவர்களிலேயே 124/5 ரன்கள் எடுத்த இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மறுபுறம் ஹாரீஸ் ரவூப், ஹஸ்னைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து போராடிய போதிலும் பேட்டிங்கில் குறைவான ரன்களை எடுத்த காரணத்தால் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது. ஆனால் செப்டம்பர் 11ஆம் தேதியான நாளை இரவு 7.30 மணிக்கு இதே துபாயில் நடைபெறும் இந்த ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இவ்விரு அணிகளும் மோதும் நிலையில் ஒரு நாளுக்கு முன்பாக இலங்கை பதிவு செய்துள்ள இந்த வெற்றி ரசிகர்களிடம் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் சமீப காலங்களில் பெரும்பாலும் தோல்விகளை சந்தித்து தரவரிசையில் 8வது இடத்தில் திண்டாடும் இலங்கை தங்களைவிட உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள பாகிஸ்தானை அசால்டாக தோற்கடித்துள்ளது. இந்த தொடரில் கோப்பையை எங்கே வெல்லப் போகிறது என்று ஆரம்பத்தில் கருதப்பட்ட இலங்கை தன்னுடைய முதல் லீக் போட்டியில் தோற்றாலும் 2வது லீக் போட்டியில் வென்று சூப்பர் 4 சுற்றில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய 3 வலுவான அணிகளை எளிதாக தோற்கடித்துள்ளது.

மேலும் இந்த தொடரில் சேசிங் செய்த அத்தனை போட்டிகளிலும் 180 இலக்கையும் சேர்த்து எளிதாக துரத்தி இலங்கை வென்றுள்ளது. எனவே நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் டாஸ் மட்டும் இலங்கை பக்கம் விழுந்தால் நிச்சயம் அந்த அணி கோப்பையை வெல்வது உறுதியாகியுள்ளது. மறுபுறம் டாஸ் அதிர்ஷ்டத்தை இழந்த பாகிஸ்தான் நாளை தோற்கும் என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் வரலாற்றில் இதைவிட கத்து குட்டிகளிடம் தோற்ற அந்த அணி முக்கிய போட்டிகளில் ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிகளையும் சாய்த்து கோப்பையை வென்ற கதைகள் உள்ளன. எனவே நாளைய இறுதிப்போட்டி ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

Advertisement