சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக ஜொலித்து வருகிறது. அந்தளவுக்கு வெற்றிகளைப் பெற்று வரும் இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையை வென்று நடப்புச் சாம்பியனாக திகழ்கிறது. 2023 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்ற இந்தியா 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்று சாதனை படைத்துள்ளது.
அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட், ரோஹித் இல்லாமலேயே இங்கிலாந்தில் 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து இந்தியா அசத்தியது. இந்தியாவின் இந்த வெற்றி நடைக்கு பேட்டிங், பவுலிங் ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் தரமான வீரர்களைக் கொண்டிருப்பதே முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக வேகப்பந்து வீச்சுத் துறையில் இந்தியா தற்போது பன்மடங்கு முன்னேறியுள்ளது.
பாகிஸ்தானிடம் உதவி கேட்கும்:
அதனாலேயே வேகத்துக்கு சாதகமான ஆஸ்திரேலிய மண்ணில் 2018/19, 2020/21 ஆகியத் தொடர்களை வென்று இந்தியா உலக சாதனை படைத்தது. மறுபுறம் அண்டை நாடான பாகிஸ்தான் 2022, 2024 டி20 உலகக் கோப்பைகளில் ஜிம்பாப்வே மற்றும் அமெரிக்கா ஆகிய கத்துக்குட்டிகளிடம் தோற்றது. சொந்த மண்ணில் நடைபெற்ற 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் தொடரில் சொதப்பிய பாகிஸ்தான் செமி ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.
2024இல் முதல் முறையாக கத்துக்குட்டியாக கருதப்படும் வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் முதல் முறையாக தங்களது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் வேகப்பந்து வீச்சுத் துறையில் தங்களுக்கு உதவுமாறு இந்தியாவிலிருந்து அழைப்பு வருவதாக பாகிஸ்தான் அணியின் தேர்வாளர் ஆகிப் ஜாவேத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் வேகப்பந்து வீச்சாளர்களை வளர்க்க பிரத்தியேக திட்டங்கள், பயிற்சிகள், வசதிகளை உருவாக்கி வருவதாக அவர் கூறியுள்ளார்.
இந்திய அணி:
அதனால் வருங்காலங்களில் பாகிஸ்தானுக்கு புதிய தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அப்படிப்பட்ட தங்களுடைய அருமையான திட்டத்தை பார்த்து இந்தியா உதவி கேட்பதாக தெரிவிக்கும் ஜாவேத் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இப்போது வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தானுக்கு வந்து பயிற்சிகளை எடுக்கிறார்கள்”
இதையும் படிங்க: நியூசிலாந்து டி20 தொடரில் ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் விளையாடுவார்களா? – சூரியகுமார் யாதவ் பதில்
“அடுத்ததாக நாங்கள் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பயிற்சிகளை எடுப்பதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு நாங்களே சவால் விடுக்காத வரை சர்வதேச அளவில் எங்களுடைய சிஸ்டம் எவ்வளவு வலுவானது அல்லது எங்களது பயிற்சியாளர்கள் எவ்வளவு திறமையானவர்கள் என்பது தெரியாது. எங்களுடைய நிரல்கள் உலகம் முழுவதிலும் விரிவடைய உள்ளது. ஏற்கனவே இந்தியாவிடமிருந்து அவர்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வழிகாட்ட உதவுமாறு எங்களுக்கு அழைப்புகள் வந்துள்ளன” என்று கூறினார்.



