
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது.
முன்னதாக 38 வயதாகும் ரோஹித் சர்மா 2027 உலகக் கோப்பையில் 40 வயதில் அசத்துவாரா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அதனாலேயே அவரை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு புதிய அணியை உருவாக்க துவங்கியுள்ளது. எனவே ரோஹித் சர்மா எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறலாம் என்ற நிலைமையிலேயே இருக்கிறார்.
அதனால் ரோஹித் சர்மா ஓய்வுக்குப் பின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக அசத்தும் அபிஷேக் சர்மாவை ஓப்பனிங்கில் விளையாட வைக்க தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அதிரடியாக விளையாடும் ஸ்டைலைக் கொண்ட ஜெய்ஸ்வால் ஒருநாள் கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மாவுக்கு முன்பாகவே அறிமுகமானதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். எனவே முதலில் ரோஹித் சர்மாவின் இடத்தில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பளிப்பதே நியாயமான செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் ரோஹித் சர்மாவை ரசிகர்கள் மறக்கும் அளவுக்கு அவருடைய இடத்தில் அசத்தும் திறமை ஜெய்ஸ்வாலிடம் இருப்பதாகவும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜெய்ஸ்வால் விரைவில் அனைத்து ஃபார்மெட்டிலும் விளையாடுவார். ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் கவர்ந்துள்ள அவர் சதத்தையும் அடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சீராக அசத்தும் அவர் 2024 டி20 உலகக்கோப்பை அணியில் அங்கமாக இருந்தார்”
“தற்சமயத்தில் கேப்டன்ஷிப் பொறுப்பு காரணமாக சுப்மன் கில் ஓப்பனிங்கில் விளையாடுகிறார். ஆனால் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வரும். அவரை நீங்கள் நீண்ட காலம் காத்திருக்க வைக்க முடியாது. அபிஷேக் ஷர்மாவை ஒருநாள் கிரிக்கெட்டில் சேர்ப்பது பற்றி பேச்சுகள் காணப்படுகின்றன. ஆனால் ஜெய்ஸ்வால் முதலில் வாய்ப்பு பெற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சுப்மன் கில்லுடன் அவர் ஓப்பனிங்கில் களமிறங்கினால் மக்கள் ரோஹித் சர்மாவை மிஸ் செய்ய மாட்டார்கள்”
இதையும் படிங்க: 23 வயது குழந்தை ராணாவை.. இப்படி டார்கெட் செய்வது வெட்கக் கேடானது.. ஸ்ரீகாந்துக்கு கம்பீர் பதிலடி
“வாய்ப்பு கிடைக்கும் போது ஜெய்ஸ்வால் அதிகமாகப் பயன்படுத்திக் கொள்வார். ஒருமுறை அவர் தனக்கான இடத்தைப் பிடித்து விட்டால் நீங்கள் மற்றவர்களை மிஸ் செய்ய மாட்டீர்கள். அடுத்த உலகக் கோப்பை சமயத்தில் ஜெய்ஸ்வால் நம்முடைய ஒருநாள் அணியின் ரெகுலர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது” என்று கூறினார்.