இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் 5வது டெஸ்ட் போட்டி ஜூலை 31ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. அத்தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. எனவே கடைசி போட்டியில் வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய இந்தியா தயாராகி வருகிறது.
அந்த சூழ்நிலையில் ஓவல் மைதானத்தில் இந்திய அணியினர் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது இந்திய பயிற்சியாளர் குழுவினர் வழக்கம் போல பிட்ச்சை நெருக்கமாக சென்று பார்த்தனர். ஆனால் அப்போது ஓவல் மைதானத்தின் பராமரிப்பாளர் லீ போர்ட்டிஸ் 2.5 மீட்டர் தொலைவில் நின்று பிட்ச்சை பார்க்குமாறு இந்திய பயிற்சியாளர்களிடம் கரராக பேசினார்.
இந்தியாவுக்கு ஒரு நியாயம்:
அதனால் கோபமடைந்த இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரிடம் கையை நீட்டி வாக்குவாதம் செய்தார். குறிப்பாக “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லாதீர்கள்” என அவரிடம் கௌதம் கம்பீர் வாக்குவாதம் செய்தார். இந்நிலையில் 2023 ஆஷஸ் தொடரில் இதே ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது.
அந்தப் போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் பிட்ச்சின் நடுவே நின்று கொண்டு லீ போர்ட்டிஸ் உடன் பேசிய புகைப்படத்தை முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தோண்டி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் இந்தியாவுக்கு ஒரு நியாயம்? இங்கிலாந்துக்கு வேற நியாயமா? என்று போர்ட்டிஸை விளாசியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
இங்கிலாந்துக்கு வேற நியாயமா:
“நீங்கள் ஏன் பிட்ச்சை பார்க்கிறீர்கள் பிரதர்? 2.5 மீட்டர் தொலைவில் நின்று பாருங்கள் என்று பராமரிப்பாளர் சொன்னார். நீங்கள் ஆணியுடன் கூடிய காலணியை போட்டிருக்கிறீர்களா என்பது முக்கியமில்லை. இதுவே இங்கு விதிமுறை என்று அவர் கம்பீர் மற்றும் இந்திய அணியிடம் சொன்னார். அதனாலேயே கம்பீர் கோபமடைந்தார். ஆனால் அதே பராமரிப்பாளர் ரப்பர் செருப்புகளை போட்டுக்கொண்டு பிட்ச் மேலே நடந்து சென்றதாக இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் சொன்னார்”
இதையும் படிங்க: ஜஸ்ப்ரீத் பும்ரா ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா? மருத்துவக்குழு கூறுவது என்ன? – விவரம் இதோ
“இத்தனைக்கும் போட்டி துவங்க 2 நாள் இருந்தும் ஓவல் மைதானத்தின் பராமரிப்பாளர் கம்பீரிடம் அப்படி சொன்னார். இங்கே 2023 ஆஷஸ் போட்டி நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் எனக்கு நினைவுக்கு வருகிறது. அதில் மெக்கல்லம், போர்ட்டிஸ் ஆகியோர் பிட்ச்சின் நடுவே நின்று கொண்டிருந்தார்கள். இது என்ன சகோதரரே? வெவ்வேறு மக்களுக்கு வெவ்வேறு விதிமுறையா?” என்று கூறியுள்ளார்.



