ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடரில் முதல் 3 போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. 4வது போட்டியில் வென்ற இங்கிலாந்து ஒய்ட்வாஷ் அவமானத் தோல்வியை சந்திப்பதிலிருந்து தப்பியது. இருப்பினும் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டி வெறும் 2 நாட்களில் முடிந்தது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இத்தனைக்கும் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியும் வெறும் 2 நாட்களில் முடிந்தது.
ஆனால் அதைப்பற்றி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து சேர்ந்தவர்கள் யாரும் அதிகம் விமர்சிக்கவில்லை. அதே போல ஐசிசியும் பெர்த் பிட்ச் நன்றாக இருந்ததாக ரேட்டிங் வழங்கியது. அந்த நிலையில் 4வது போட்டியும் 2 நாட்களுக்குள் முடிந்துள்ளதால் இந்திய ரசிகர்கள் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்களை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.
பிபிசியின் பித்தலாட்டம்:
ஏனெனில் கடந்த காலங்களில் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் 2 நாட்களில் முடிந்த போது, இந்தியா குறுக்கு வழியில் வெல்வதற்காக வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான பிட்ச்களை அமைத்ததாக அவர்கள் விமர்சித்திருந்தார்கள். இந்நிலையில் இந்தியாவில் 3 நாட்களில் முடிந்த போட்டிகளை விமர்சித்த இங்கிலாந்தின் பிபிசி ஊடகம் ஆஸ்திரேலியாவை புகழ்வதாக முன்னாள் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
அதே போல மெல்போர்னில் இங்கிலாந்து வென்றதால் பென் ஸ்டோக்ஸ் இந்தியாவை விமர்சித்த அளவுக்கு ஆஸ்திரேலியாவை விமர்சிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அந்த வகையில் இங்கிலாந்தினரின் பித்தலாட்ட நிலைப்பாடு பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டி 2 நாட்களில் முடிந்த போது அதை டெஸ்ட் கிரிக்கெட்டின் அழிவு என்று பிபிசி செய்தியாக போட்டது. ஆனால் அவர்கள் ஆஸ்திரேலியாவில் 2 நாட்கள் டெஸ்ட் போட்டிகளும் மோசமானதல்ல, சிறப்பாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்”
ஸ்டோக்ஸின் ராஜதந்திர பேச்சு:
“அவர்களுடைய பாசாங்குத்தனம் வேறு மாதிரியாக இருக்கிறது. ஐசிசியும் பெர்த்தில் 2 நாட்களில் முடிந்த போட்டியின் பிட்சுக்கு நல்ல ரேட்டிங்கை வழங்கியுள்ளது. மொத்த உலகமும் பிட்ச் நன்றாக இருந்தது, பேட்ஸ்மேன்களின் டெக்னிக் தான் மோசமாகி விட்டதாக சொன்னார்கள். அதையே தற்போது அவர்கள் மேல்பார்ன் போட்டிக்கும் சொல்வார்கள்”
இதையும் படிங்க: சுப்மன் கில் முடிஞ்சதா நினைக்காதீங்க.. இதை வெச்சே டி20 கேப்டனா கம்பேக் கொடுத்துருவாரு.. ஹர்பஜன் பேட்டி
“கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பிட்ச் ஒரு திறமைக்கு சாதகமாக இருக்கிறது என்று சொல்லி ராஜதந்திரமாக பேசுகிறார். ஆனால் இதுவே இந்தியாவில் ஒரு பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தால் அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் இறப்பதாக சொல்வார்கள். உண்மையில் அங்கே ஸ்பின் பவுலர்களுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கிறது. மெல்போர்ன் போட்டியில் ஸ்பின்னர் ஒரு ஓவரை கூட போடவில்லை. அதற்குள் போட்டி முடிந்தது சரியா? அதுவே இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஒரு ஓவரை கூட வீசாவிட்டால் பெரிய விமர்சனம் வரும்” என்று கூறினார்.



