
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி இரண்டு சதங்கள் உட்பட 68 ரன்கள் சராசரியுடன் 479 ரன்கள் குவித்து அசத்தினார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பண்ட் ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை முன்னாள் வீரரான மகேந்திர சிங் தோனியை தற்போதே ரிஷப் பண்ட் தாண்டிவிட்டார் என்றும் இனிவரும் காலத்தில் இந்தியாவின் தலைசிறந்த டெஸ்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்றால் ரிஷப் பண்ட் தான் என்று புகழும் அளவிற்கு அவர் உருவெடுப்பார் என முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை தோனியை எண்ணிக்கையின் அடிப்படையில் ரிஷப் பண்ட் தற்போதே தாண்டி விட்டார். தோனி தன்னுடைய டெஸ்ட் கரியரில் 90 போட்டிகளில் விளையாடி ஆறு சதங்களை மட்டுமே அடித்திருந்தார்.
ஆனால் ரிஷப் பண்ட் அவரை ஒப்பிடுகையில் பாதி ஆட்டங்களிலேயே 8 சதங்களை அடித்துவிட்டார். இன்னும் பல ஆண்டுகள் அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்க இருக்கும் வேளையில் ரிஷப் பண்ட் இந்தியாவின் நம்பர் 1 விக்கெட் கீப்பராக கரியரை முடிப்பார்.
தோனியை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் 1500 ரன்கள் மட்டுமே குறைவாக உள்ள ரிஷப் பண்ட் இன்னும் ஒரு சில ஆண்டுகளிலேயே அவரை தாண்டி முதலிடத்திற்கு செல்வார். அதுமட்டுமின்றி உலகளவில் தலைசிறந்த பேட்ஸ்மேனான ஆடம் கில்கிறிஸ்ட்டையும் எளிதில் அவர் தாண்டி செல்வார் என ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அகர்கர் இடத்தில் நான் இருந்தா.. விராட் கோலியை இதை செஞ்சுட்டு போங்கன்னு வற்புறுத்திருப்பேன்.. திலிப் வெங்சர்கார்
கடந்த 2018-ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமான ரிஷப் பண்ட் இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8 சதம் மற்றும் 18 அரைசதம் என 44 ரன்கள் சராசரியுடன் 3427 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.