இந்திய அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு நடப்பது ரொம்பவே அநியாயம் – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

Aakash Chopra
- Advertisement -

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து அடுத்த கட்ட இளம் வீரர்கள் தற்போது டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் துவக்க வீரர்களாக இடம் பிடித்து விளையாடி வருகின்றனர். அதோடு சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்த இந்திய அணியில் பல்வேறு திறமையான இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு நடப்பது அநியாயம் : ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

ஆனாலும் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட தகுதியாக இருந்தும் ஒரு சில வீரர்களுக்கு இடம் கிடைக்காமல் போனது பலரது மத்தியிலும் பேசுபொருளாக ஏற்கனவே மாறியிருந்தது. அந்த வகையில் இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நிச்சயம் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாடியிருக்க வேண்டும் என பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த நடப்பு ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மட்டுமின்றி மூன்று வகையான இந்திய அணியிலும் இடம்பெற்று விளையாட தகுதியானவர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் என அவரை ஆதரித்தும், இந்திய அணியின் நிர்வாகத்தை விமர்சித்தும் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை பொருத்தவரை அவர் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடக்கூடிய தகுதியான ஒரு வீரர். ஆனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தற்போது விளையாட வைக்கப்பட்டு வருகிறார். இந்திய அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு நடப்பதெல்லாம் ரொம்பவே அநியாயம்.

- Advertisement -

ஏனெனில் அவரைப் போன்ற ஒரு திறமையான துவக்க வீரர் 3 வடிவ கிரிக்கெட்டிலும் இடம்பிடித்து விளையாட வேண்டிய ஒரு நபர். ஆனால் அவரை ஒரு வடிவத்தில் மட்டுமே இந்திய அணி பயன்படுத்தி வருகிறது. எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் நிச்சயம் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவிப்பார். அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியிலும் அவர் இடம் பிடிப்பார் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நான் பேட்டிங்கில் அசத்த காரணமே அவர்தான் – வாஷிங்டன் சுந்தர் பகிர்வு

ஆனால் டி20 போட்டிகளை பொருத்தவரை ஏற்கனவே இந்திய அணிக்குள் பலத்த போட்டி நிலவுவதால் அவருக்கு அணியில் இடம் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியிலும் அவர் விரைவாக தனது வாய்ப்பை எட்டிப்பிடிப்பார் என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement