
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படாதது சில ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ருதுராஜ் இந்திய டி20 அணிக்காகவும் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தியுள்ளார்.
அதை விட 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக சிவம் துபே தேர்வு செய்யப்பட்டிருந்தார். அந்த வாய்ப்பில் ஆரம்பகட்ட போட்டிகளில் தடுமாறிய அவர் ஃபைனலில் முக்கியமான ரன்களை அதிரடியாக எடுத்து வெற்றியில் பங்காற்றினார். அதன் பின் காயத்தை சந்தித்த அவர் மீண்டும் குணமடைந்து 2024 சயீத் முஸ்தாக் அலி கோப்பையை மும்பை அணி வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.
அப்படி இருந்தும் அவர் இங்கிலாந்து டி20 தொடரில் கழற்றி விடப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு குழப்பமாக அமைந்துள்ளது. இந்நிலையில் சிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இங்கிலாந்து தொடரில் தேர்ந்தெடுக்கப்படாதது ஏன் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“சிவம் துபேவுக்கு என்னவாயிற்று? ருதுராஜ் பற்றியும் நான் பேச விரும்பினேன். ரஜத் படிடாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சிவம் துபே டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். நீங்கள் வெல்லும் போது பாராட்டு கொடுக்க வேண்டும். அத்தொடரில் ஆரம்பத்தில் சுமாராக பேட்டிங், ஃபீல்டிங் செய்த அவர் ஃபைனலில் நன்றாக விளையாடினார்”
“அவர் டி20 உலகக் கோப்பை சாம்பியனாக சாதனையும் படைத்தார். அதன் பின் கொஞ்சம் காயத்தை சந்தித்த அவர் தற்போது அணியிலேயே இல்லை. அதைப் பற்றி யாரும் பேசவும் இல்லை. ரியான் பராக் காயத்தை சந்தித்ததால் யாரும் பேசவில்லை. ஆனால் துபே தற்போது குணமடைந்தும் திடீரென அணியில் இருந்து காணாமல் போயுள்ளார்”
இதையும் படிங்க: ரஹானேவை பாருங்க.. பிசிசிஐ உத்தரவை ஏற்று 2012க்குப்பின் கோலிக்கு.. டெல்லி கிடுக்குப்பிடி அறிவிப்பு
“உலகக்கோப்பை அணியில் விளையாடுவதற்கு போதுமானவராக அவர் இருந்தால் இன்னும் சில வருடங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். இல்லையென்றால் ஏன் உலகக் கோப்பையில் தேர்ந்தெடுப்பீர்கள். முன்பெல்லாம் காயத்தை சந்தித்து வெளியேறுபவர்கள் மீண்டு வரும் போது அவர்களுடைய இடத்தில் அசத்துபவர்கள் அவர்களுக்காக வழி விட வேண்டும் என்ற கூற்று இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் என்ன செய்தாலும் இடம் கிடைப்பது கடினமாக இருக்கிறது” என்று கூறினார்.