
ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியானது தற்போது ஆஸ்திரேலியா பயணித்து டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதற்கு முன்னால் தற்போது பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்பட்ட போது முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா அதிகாரவபூர்வமாக அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து பும்ராவை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் ஆஸ்திரேலியா சென்றடைந்தனர்.
பின்னர் பும்ராவிற்கு பதிலாக அணியில் இடம்பெறப் போகும் வீரர் யார்? என்பது குறித்த கேள்வி அனைவரது மத்தியிலும் பெருமளவில் எழுந்தது. அதனை தொடர்ந்து ரிசர்வ் வீரர்களாக அணியில் இருந்த முகமது ஷமி அல்லது தீபக் சாகர் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முகமது ஷமிக்கு அந்த வாய்ப்பு பி.சி.சி.ஐ-யின் மூலம் அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த முகமது ஷமி தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியிலிருந்து புறப்பட்டு ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளார். பும்ராவிற்கு பதிலாக ஷமியை சேர்த்தது சரிதான் என்றாலும் அவரை இவ்வளவு தாமதமாக ஏன் அணியில் தேர்வு செய்தீர்கள் என்று பலரும் தங்களது கேள்விகளை முன் வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : பும்ராவிற்கு பதிலாக முகமது ஷமி இந்திய அணியில் அறிவிக்கப்பட்டது சரியான ஒன்றுதான். ஆனால் அவருக்கு கடந்த ஆண்டிலிருந்து ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை?
அதாவது 2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு பிறகு அவருக்கு ஏன் தொடர்ந்து டி20 போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கவில்லை? அவர் விளையாடும் அளவிற்கு பிட்டாக இருந்தும், தயாராக இருந்தும் அவருக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : டி20 உலக கோப்பையில் அதிவேகமாக சதமடித்த டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியல் – லிஸ்ட் உள்ளே
ஆகாஷ் சோப்ராவின் இந்த கருத்து சரியான ஒன்றாகவே இருப்பதால் ரசிகர்களும் அதே கேள்வியை முன்வைக்கின்றனர். ஏனெனில் ஷமி ஐபிஎல் தொடரில் குஜராத் அணி டைட்டில் வெல்ல மிக முக்கிய காரணமாக செயல்பட்ட போதிலும் டி20 கிரிக்கெட்டில் அவருக்கு இந்திய அணி வாய்ப்பினை மறுத்தது ஏன்? என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.