ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இவரை ஏன் எடுக்கல. எனக்கு புரியல – ஆகாஷ் சோப்ரா கேள்வி

Aakash-Chopra
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அங்கு நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 தொடர் என இரண்டையும் கைப்பற்றிய பிறகு தற்போது நாடு திரும்பியுள்ளது. இதனையடுத்து இம்மாத இறுதியில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த ஆசிய கோப்பை தொடரில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் பெரும்பாலும் டி20 உலகக்கோப்பை அணிக்காக தேர்வு செய்யப்படுவார்கள் என்பதனால் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது.

- Advertisement -

அந்த வகையில் நேற்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தின் மூலமாக 15 பேர் கொண்ட ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது. அதில் வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் ஆகிய மூவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களை தவிர்த்து பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் தேர்வில் உள்ள குறைபாடுகள் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று வெளிப்படையாக தனது கேள்வியை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Shami-1

எனது கேள்வி யாதெனில் துபாய் மைதானத்தில் கடந்த ஐபிஎல்-இன் போது வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் குறிப்பாக ஐக்கிய அரபு மைதானத்தில் சிறப்பாக செயல்பட்ட முகமது ஷமியை ஏன் இந்திய அணி இந்த ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் எடுக்கவில்லை என்பது எனக்கு புரியவில்லை. நிச்சயம் அவர் இந்த இந்திய அணியில் இருக்க வேண்டிய ஒரு வீரர்.

- Advertisement -

ஆவேஷ் கான் மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரையும் சேர்த்து பார்க்கும் போது நிச்சயம் நாம் கண்ணை மூடிக்கொண்டு ஷமியை தேர்வு செய்யலாம். ஆனால் அவரை நீக்கிவிட்டு ஆவேஷ் கானை தேர்வு செய்ததில் என்ன நியாயம் இருக்கிறது என்பது புரியவில்லை என தனது கேள்வியை முன் வைத்துள்ளார். அவர் கேள்வி எழுப்பியது போலவே ரசிகர்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் வாயிலாக முன்வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க : கார் விபத்தில் சிக்கி அகால மரணமடைந்த ரசிகர்களின் மனதை கவர்ந்த அம்பயர் – வெளியான துக்கசெய்தி

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட முகமது ஷமி 16 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அனுபவம் வாய்ந்த முகமது ஷமி நிச்சயம் இந்திய அணியில் விளையாட வேண்டிய ஒரு வீரர் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement