இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் மாதம் இரண்டாம் வாரம் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக வீரர்களுக்கு இடையே டிரேடிங் முறையும் நடைமுறை உள்ளதால் அந்த வகையிலும் சில முக்கிய மாற்றங்கள் நடைபெற இருக்கின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு டிரேடிங் முறையில் மிகப்பெரிய மாற்றமாக சஞ்சு சாம்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது மாற்றம் பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அடுத்த கேப்டன் இவர்தான் : ஆகாஷ் சோப்ரா கருத்து
ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகத்துடன் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக அந்த அணியில் இருந்து வெளியேற நினைக்கும் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணியின் நிர்வாகம் தங்களது அணிக்கு கொண்டுவர முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வரும் பட்சத்தில் சிஎஸ்கே அணியிலிருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று கூறப்படும் வேளையில் அப்படி இந்த மாற்றம் உறுதியாகும் பட்சத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஏற்கனவே மூன்று இளம் வீரர்கள் போட்டிக்கு இருக்கும் வேளையில் டிரேடிங் செய்யப்படும் ரவீந்திர ஜடேஜா அந்த அணியின் புதிய கேப்டனாக மாறுவார் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் ரவீந்திர ஜடேஜாவை தாண்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகம் அவர்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை கேப்டனாக நியமிக்கலாம். அதேபோன்று ஜெய்ஸ்வால் தங்களது அணி நிர்வாகத்திடம் நான் இங்கேயே இருக்கிறேன் என்றும் எனக்கு கேப்டன் பதவி வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்க வேண்டும்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மாவின் மாபெரும் சாதனையை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு – விவரம் இதோ
ஏனெனில் தற்போது தனது கரியரின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஜெய்ஸ்வால் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக அந்த அணிக்கு விளையாட முடியும். அதேபோன்று ஒரு சில சீசன்கள் அவர் அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்டால் அவருக்கு கேப்டன்சி அனுபவம் கிடைக்கும். எனவே இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு ஜெய்ஸ்வாலை அந்த அணியின் நிர்வாகம் கேப்டனாக மாற்ற வாய்ப்புள்ளதாக ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



