
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய எட்டு நாடுகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடரானது எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த வாரம் பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அந்த அணியில் இடம் பிடித்துள்ள 15 வீரர்களும் செப்டம்பர் 4-ஆம் தேதி இந்தியாவில் இருந்து துபாய் புறப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் துபாயில் உள்ள ஐசிசி கிரிக்கெட் அகாடமியில் சில நாட்கள் பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணியானது செப்டம்பர் 10-ஆம் தேதி தங்களது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்ள இருக்கிறது.
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார்? என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது. ஏனெனில் கடந்த பல தொடர்களாகவே இந்திய அணியின் துவக்க வீரராகவும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் சஞ்சு சாம்சன் விளையாடி வந்த வேளையில் அவர் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பிளேயிங் லெவனில் வாய்ப்பை இழப்பார் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான சுப்மன் கில் மீண்டும் டி20 அணிக்கு கம்பேக் கொடுத்ததோடு மட்டுமின்றி துணை கேப்டன் பதவியையும் பெற்றுள்ளதால் அவரே அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து துவக்க வீரராக விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக சஞ்சு சாம்சன் துவக்க வீரருக்கான வாய்ப்பை இழப்பார்.
அதுமட்டுமின்றி மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன் பெரியளவில் சோபிக்க மாட்டார் என்பதனால் அவருக்கு பதிலாக பினிஷராக விளையாடும் ஜிதேஷ் சர்மாவுக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று பலரும் கூறி வருகின்றார். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஜிதேஷ் சர்மா தான் விளையாட வாய்ப்புள்ளதாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொருத்தவரை ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கீப்பராக ஜிதேஷ் சர்மா தான் விளையாடுவார். ஏனெனில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ஃபினிஷராக பின் வரிசையில் களமிறங்கிய அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதன் காரணமாக நிச்சயம் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவரே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பின் வரிசையில் விளையாடுவார்.
இதையும் படிங்க : டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இருந்து கே.எல் ராகுல் வெளியேறினால் அவரை வாங்க ஆர்வம் காட்டும் – 3 அணிகள்
இந்திய அணியின் டாப் ஆர்டரில் சஞ்சு சாம்சனை நீக்க அதிக வாய்ப்புள்ளதால் நிச்சயம் அவரை பின் வரிசையில் விளையாட வைக்க முடியாது. அதேவேளையில் ஜிதேஷ் சர்மா அந்த இடத்திற்கு பொருத்தமானவர் என்பதனால் அவரே விக்கெட் கீப்பராக இடம் பிடிப்பார் என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.