இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுல் கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 145 போட்டிகளில் விளையாடி 5 சதம் மற்றும் 40 அரைசதம் என 46 ரன்கள் சராசரியுடன் 5222 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அவர் சில சீசனங்களில் கேப்டனாகவும் இருந்து சில அணிகளை வழிநடத்தி உள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு லக்னோ அணியின் கேப்டனாக இருந்த அவர் அந்த அணியில் இருந்து வெளியேறிய வேளையில் 2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது அவரை 10 கோடி ரூபாய்க்கு மேல் மெகா ஏலத்தின் போது தேர்ந்தெடுத்தது.
கே.எல் ராகுலை வாங்க தயாராக இருக்கும் 3 அணிகள் :
இதன் காரணமாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவும் கே.எல் ராகுல் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனக்கு கேப்டன் பொறுப்பு தேவையில்லை என்றும் தான் முழுநேர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாட இருப்பதாகவும் கே.எல் ராகுல் அறிவித்திருந்தார். அதன் காரணமாக அக்சர் பட்டேல் தலைமையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது 2025 ஐபிஎல் தொடரில் விளையாடியிருந்தது.
நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது இரண்டாம் பாதியில் தொடர் தோல்விகளை சந்தித்து பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதிபெறாமல் வெளியேறியிருந்தது. இதன் காரணமாக அடுத்த 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அந்த அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடிய கே.எல் ராகுல் 149 ஸ்டிரைக் ரேட்டுடன் 53 ரன்கள் சராசரியுடன் 539 ரன்களை குவித்து அசத்தியிருந்த வேளையில் எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அவர் டெல்லி கேபிட்டல்ஸ் அணியிலிருந்து வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ஒருவேளை டெல்லி அணியில் இருந்து அவர் வெளியேறினால் அவரை ஏலத்தில் எடுக்க மூன்று அணிகள் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனிக்கு அடுத்து நல்ல ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேடி வருவதால் அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டும். அதேபோன்று இரண்டாவதாக கொல்கத்தா அணியிலும் ஒரு விக்கெட் கீப்பர் மற்றும் துவக்க ஆட்டக்காரர் தேவைப்படுவதால் கே.எல் ராகுலை எடுக்க முனைப்பு காட்டும். ஏற்கனவே 2025 மெகா ஏலத்தின் போது அவரை தவறவிட்ட கொல்கத்தா அணி நிச்சயம் இம்முறை கே.எல் ராகுலுக்காக போட்டி போடுவார்கள் என்பது உறுதி.
இதையும் படிங்க : அந்த இந்திய பேட்ஸ்மேனுக்கு எதிராக பந்து வீசுவது ரொம்ப கடினம்.. அவர் செம டேலன்ட் – ரவி பிஷ்னாய் கருத்து
மூன்றாவதாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாக செயல்பட்டாலும் அந்த அணியில் நிலையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இல்லாமல் இருந்து வரும் வேளையில் டாப் ஆர்டரில் கே.எல் ராகுல் இணைந்தால் அந்த அணிக்கு மேலும் பலம் கிடைக்கும் என்பதனால் அவரை தேர்வு செய்ய சன் ரைசர்ஸ் அணியும் முனைப்பு காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



