இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அந்த 2 அணிகளிலுமே யுஸ்வேந்திர சஹால் தேர்வு செய்யப்படாதது சில ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. 2016ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 2017 – 2019 வரையிலான காலகட்டங்களில் இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னராக வலம் வந்து வெற்றிகளில் பங்காற்றினார்.
குறிப்பாக குல்தீப் யாதவுடன் ஜோடியாக சேர்ந்து அசத்திய அவர் அஸ்வினுக்கே போட்டியாக வந்தார். இருப்பினும் தோனி ஓய்வு பெற்ற பின் சிறப்பாக விளையாடுவதற்கு தடுமாறிய அவர் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். ஆனால் மனம் தளராத சஹால் ஐபிஎல் தொடரில் போராடி ஊதா தொப்பியை வென்று 2022 டி20 உலகக் கோப்பையில் கம்பேக் எடுத்தார்.
பரிதாப சஹால்:
ஆனாலும் பிளேயிங் லெவனில் பெரிதாக வாய்ப்பு பெறாத அவர் 2024 டி20 உலகக் கோப்பையிலும் பெஞ்சிலேயே அமர்ந்திருந்தார். அதே போல ஒருநாள் கிரிக்கெட்டிலும் 2023 ஜனவரி மாதத்திற்கு பின் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையே வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஸ்னோய் ஆகிய அடுத்த தலைமுறை வீரர்கள் அவருக்கு போட்டியாக வந்துள்ளார்கள்.
அதற்கு முன்பாக குல்தீப் யாதவ், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அவரை விட நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி போட்டியை கொடுத்து வருகிறார்கள். அதன் காரணமாக சஹாலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். இந்நிலையில் 72 ஒருநாள் போட்டிகளில் 121 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியும் சஹால் கேரியரை பிசிசிஐ முடித்து விட்டதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஏமாற்றத்தை தெரிவித்துள்ளார்.
கேரியர் முடிந்ததா:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சஹால் சுவாரசியமான விஷயமாக இருக்கிறார். கடைசியாக அவர் 2 வருடத்திற்கு முன்பாக 2023 ஜனவரி மாதம் விளையாடினார். அவருடைய நம்பர்கள் நன்றாக இருக்கிறது. மேலும் உள்ளூரில் அவர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை எடுத்து வருகிறார். இருப்பினும் அவர் முழுமையாக இந்திய அணியிலிருந்து முடிக்கப்பட்டுள்ளார்”
இதையும் படிங்க: அவருக்கு சொல்ல வேண்டியதில்லை.. உள்ளீடுகள் முக்கியம்.. ரோஹித், ஜெய்ஸ்வால் பற்றி மும்பை கேப்டன் ரஹானே
“அவருடைய ஃபைல் மூடப்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அவரை 2 வருடங்களாக ஒதுக்கி வருவதால் தற்போதைய இந்திய அணியில் வாய்ப்பு இல்லை. அதனால் திடீரென்று அவர் இந்திய அணியில் இல்லாதது போல் தெரிகிறது. இனிமேலும் அவரை தேர்ந்தெடுப்பது பின்னோக்கி செல்லக்கூடிய ஒரு படியாக இருக்கும்” என்று கூறினார்.



